கடதாசித் தொழிற்சாலைக்கு ஒப்படைத்தல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உற்பத்திக்குத் தற்போது பயன்படுத்தப்படும் பிரதான மூலப்பொருளாக பாவனையிலிருந்து அகற்றப்படும் கடதாசியே பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த உற்பத்திகளைத் தடையின்றி மேற்கொண்டு செல்வதற்காக பாவனையிலிருந்து அகற்றப்படும் கடதாசிகளைத் தொடர்ச்சியாக விநியோகிப்பது அவசியமாகும்.
அரச நிறுவனங்களில் பாவனையிலிருந்து அகற்றப்படும் கடதாசி, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலைக்கு வழங்குவதன் மூலம், தொடர்ச்சியாகப் போதியளவு மூலப்பொருளை விநியோகிக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு தொடர்ச்சியாகக் கடதாசி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரச அச்சகம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், தேர்தல் ஆணைக்குழு. கல்வி அமைச்சு போன்ற அரச நிறுவனங்கள், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து அகற்றப்படும் தரமான வெள்ளைக் கடதாசி உள்ளிட்ட அகற்றப்படும் கடதாசிகள், வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசிக் கம்பனியால் போக்குவரத்து வசதிகள் வழங்குவதன் அடிப்படையில் இலவசமாக வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசிக் கம்பனிக்கு ஒப்படைத்தல், ஏனைய அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசுடன் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் அகற்றப்படும் கடதாசிகளை, விலைமனுக் கோரல் செயன்முறை மூலம் குறித்த நிறுவனமும் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசிக் கம்பனி உடன்படுகின்ற சலுகை விலையில் குறித்த கம்பனிக்கு ஒப்படைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.