அரசாங்க அதிகாரிகளுக்கிருக்கும் சிக்கலான சட்டத் தடைகளை நீக்கி, மக்களுக்குத் துரிதமான நிவாரணங்களை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் - அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன
இலங்கையிலுள்ள மிகச் சிக்கலான காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அரச அதிகாரிகள் எதிர்கொள்ளும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட "சட்ட மருத்துவ முகாம்" (Law Clinic) திட்டத்தின் இரண்டாம் நாள் அண்மையில் (07) கண்டியில் உள்ள கோல்டன் கிரவுன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்த விசேட அறிவிப்பை விடுத்தார்.
பண்டாரகம், ஹேவாகம் மற்றும் பிரவேணி போன்ற பழங்காலத்திலிருந்தே நிலவி வரும் சிக்கலான காணி முறைமைகளும், 1833 கோல்புரூக் சீர்திருத்தங்களுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட தரிசு நிலச் சட்டங்களும் பாரம்பரிய காணி உரிமைகள் தொடர்பாக பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது நீதித்துறையில் உள்ள காணி வழக்குகள் 40-50 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆரம்பத் தரப்பினர் இப்போது உயிருடன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள அனைத்து சட்டவிதிகளையும் மீளாய்வு செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின்படி விசேட குழுவொன்று தற்போது செயற்பட்டு வருவதாக அமைச்சர் வெளிப்படுத்தினார்.
2025 நவம்பரில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமை கடந்த மூன்று தலைமுறையினரிடையே காணப்படாத மிக மோசமான ஒன்றாக அமைந்ததாக அமைச்சர் நினைவு கூர்ந்தார். இதன்போது தமது தனிப்பட்ட வசதிகளையும் பொருட்படுத்தாது பல நாட்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட முழு அரச உத்தியோகத்தர்களுக்கும் அமைச்சர் தனது கௌரவத்தைச் செலுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள், கணக்காய்வு விசாரணைகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்கள் காரணமாக தற்போதைய அரச சேவை கடந்த காலத்தை விட மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் சந்தன அபயரத்ன, நிலவும் சட்ட மற்றும் சுற்றுநிருபப் பிரச்சினைகளால் அரச அதிகாரிகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார். 2026 ஆம் ஆண்டு சவாலானதாக இருந்தாலும், அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பொறுப்புக்களை நிறைவேற்றினால் கஷ்டங்கள் இல்லாத எதிர்கால இலங்கையை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அமைச்சின் வழிகாட்டலின் கீழ், அமைச்சின் பிரதேச நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவின் மேலதிகச் செயலாளர் கலாநிதி ரோஷிணி திஸாநாயக்க தலைமையிலான குழுவினரின் ஒருங்கிணைப்பில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிதி உதவியுடன் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது முக்கியமாக "திட்வா" சூறாவளியினால் மீள்குடியேற்றப்பட்டவர்களின் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இதன்போது "திட்வா" அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக அரச நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கேகாலை மாவட்டச் செயலாளர் எச்.எம். ஹேரத், கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிகச் செயலாளர் ஓமாலி விமலரத்ன, காணி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஈ.ஏ.ஆர். ரேணுக்கா, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திர பத்திரனகே மற்றும் கண்டி, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


