அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முன்னுரிமை மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு அதனுடன் இணைந்த அத்தியாவசியத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய 5,882 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.
இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளைக் கருத்திற்கொண்டு பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு எஅமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 909 வெற்றிடங்கள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுற்றாடல் அமைச்சு 144, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு 2500, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 22, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு 03, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 185, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு 20, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு 1615, மத்திய மாகாண சபை 72 மற்றும் ஊவா மாகாண சபை 303 என மொத்தம் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கே இவ்வமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.