உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்
  • :
  • முதலீட்டாளர்கள் எந்த தரகுப் பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம்.
  • தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நிறைவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பில்லை.
  • இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நேற்று (10) நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தடைகளால் பூட்டப்பட்ட பொருளாதாரத்திற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திர இயக்கத்துடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் சுதந்திரமான இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அபிவிருத்தியை எட்ட முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த ஆண்டு
வரவு செலவுத் திட்டம், பொருளாதாரத்திற்கு பாரிய அதிர்ச்சியை சந்திக்காத வகையில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.
பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, ரூபாயின் பெறுமதிக்கு தாங்க முடியாத அழுத்தத்தை வழங்காது இருப்பதை உறுதி செய்வதில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின்படி சில முடிவுகள் எடுக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டின் நம்பிக்கையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் சரியான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், அதன் விளைவாக, வங்குரோத்தான அரசை வங்குரோத்து நிலையிலிருந்து உத்தியோகபூர்வமாக மீட்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் ஒவ்வொரு ரூபாயும் கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்தின் காரணமாக, ஜப்பானிய அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொருளாதார ரீதியாக முக்கியமான 11 திட்டங்களின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் சீன அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 திட்டங்களின் பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், மன்னாரில் 50 மெகாவோர்ட் காற்றாலையை நிர்மாணிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பாரிய அளவிலான முதலீடுகளைக் கொண்டுவரவும் தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குள் மட்டுமல்ல, சர்வதேச சந்தையிலும் இளம் தொழில்முனைவோருக்குத் தேவையான பலத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் நாம் மிகவும் வலுவான அரசியல் நிலையைக் கட்டியெழுப்பியுள்ளோம். இதுவரை உருவாக்கப்பட்ட பாராளுமன்றங்களில், ஒரு காலத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பி பின்னர் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், ஒரு காலத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பி திடீரென எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் நம் நாட்டுக் குடிமக்கள் கண்டிருக்கிறார்கள். தற்போதைய பாராளுமன்றத்தில் அவ்வாறான நிலைமை இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே தெளிவான பிரிவு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியல் ஸ்திரத்தன்மையைக்
காட்டுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது முன்மாதிரியான அரசியல் தொடங்கியுள்ளது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நினைவு கூர்ந்தார். எனவே, தற்போதைய அரசாங்கத்தின் முடிவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் ஏற்படாது என்று ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இளம் தொழில்முனைவோர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]