அதிகமான இலங்கை இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும் மேலும் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமட்டா அகியோ தெரிவித்தார்.
ஜப்பான் தூதுவர் இசோமட்டா அகியோ மற்றும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி லால்காந்த இடையே நேற்று (24) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையின் சந்தையில் கேள்விக்கு ஏற்ற விதத்தில் விவசாய உற்பத்திகளை முன்னேற்றுதல், உள்நாட்டு விவசாயத் துறைக்கான உரம் மற்றும் கிருமி நாசினிகளை சரியாகவும் போதிய அளவிலும் பயன்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை பெற்றுக்கொள்ளல், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்நாட்டு திரவப்பால் உற்பத்தித் தொழிற்சாலைகளை முன்னேற்றதற்காக அவசியமான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல், வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும் உள்நாட்டு விவசாயிகள் பாரம்பரிய விவசாய தொழிலில் இருந்து புத்தாக்கம் செய்யப்பட்ட விவசாயத்துறைக்கு விவசாயிகளைக் கொண்டு வருதல் மற்றும் விவசாயத் துறையில் இருந்து விலகிச் செல்லும் இளைஞர்களை மீண்டும் விவசாயத் துறைக்கு கொண்டு வருவதற்கு ஊக்கமளிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்வது என்பன தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.