துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு சமீபத்தில் கொழும்பு துறைமுக இழுவைப் படகு முற்றத்தில் விசேட ஆய்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்.
இதன்போது, துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான இழுவைப் படகுகள் முறையான பழுதுபார்ப்பு இல்லாமல் செயலற்ற நிலையில் விடப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டது, மேலும் இழுவைப் படகுகள் செயல்படாததால், சேவைகளை வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது என்றும், எனவே தனியார் துறையுடன் போட்டித்தன்மையுடன் இந்த சேவைகளை வழங்கும் திறன் இழக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், உயர் நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர், முறையான பழுதுபார்ப்பு இல்லாததால் இந்த சேவை செயலற்றிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும், இது எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்றும் கூறினார்.
தற்போது செயல்படாத இழுவைப் படகுகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் நேரம் குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள்ளும்;, நாளாந்த இழுவைப் படகு சேவைகளை வழங்குவது குறித்த அறிக்கையை மாதந்தோறும் பிரதி அமைச்சருக்கு அனுப்புமாறும் இதன்போது கோரப்பட்டது.
இந்த நிகழ்வில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


