சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் சீன சர்வதேச நுகர்வோர் தயாரிப்பு கண்காட்சி 2026 க்கு இலங்கை பிரதிநிதிகளை அழைப்பதற்காக, கொழும்பில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கும் சீனாவின் ஹைனான் மாகாண மக்கள் கவுன்சிலின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் யான் ஜிஜுனுக்கும் இடையேயான சந்திப்பொன்று அண்மையில் (18) நடைபெற்றது.
ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் சாத்தியக்கூறுகள், இரு தரப்பினருக்கும் இடையே விவசாய பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்துதல், ஹைனான் துறைமுகம் மூலம் இலங்கையால் ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்கள், ஆடைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான வரிச் சலுகைகளைப் பெறுதல் மற்றும் இலங்கையில் ஹைனான் மாகாண முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, consumer expo 2026 கண்காட்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், மேலும் இந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கை பிரதிநிதிகளின் வருகையையும் உறுதிப்படுத்தினார்.


