17-03-2026 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை
அண்மைக்கால நிலைமைகள் குறித்து எமது நாட்டு மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் தெளிவின்மையும் காணப்படுகிறது. பொருளாதாரத் தேவைகள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, அன்றாடம் தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுகிறது.
இவ்வாறான பிரச்சினைகளின் போது எதிர் கொண்ட மோசமான அண்மைக்கால அனுபவங்கள் காரணமாக இவ்வாறான நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் அரசாங்கம் என்ற வகையில் எமது நிலைப்பாடு நடுநிலை வகிப்பதாகும். எமது செயற்பாடுகள், உடன்பாடுகள் அனைத்தும் இந்த நடுநிலைப் போக்கிலே தங்கியுள்ளது. இந்த நடுநிலையை பேண வேண்டியுள்ளது. இந்த நடுநிலைப் போக்கு சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எம்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் எந்த திசைக்குத் தள்ளப்பட்டாலும் எமது நடுநிலைப் போக்கை மாற்ற மாட்டோம்.
எந்த அதிர்வுக்கும் முகங்கொடுக்கும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
உள்ளக அதிர்வு மற்றும் வெளி அதிர்வு என இரு வகை அதிர்வுகளை நாடு எதிர்கொள்கிறது. வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அதிர்வுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க எம்மால் முடிந்தது. கடந்த இரண்டு மாத கால பொருளாதார தரவுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் வெளி அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வுக்கு ஏற்றவாறு எமது பொருளாதாத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த மோதலில் ஒவ்வொரு தரப்பும் யுத்தத்தின் தமது இலக்குகளை தெரிவு செய்துள்ளன. ஆட்சியை மாற்றுவதை சில தரப்புகள் இலக்காகக் கொண்டுள்ளன. சில தரப்புகள் விநியோகக் கட்டமைப்பை முடக்குவதை தமது இலக்காகக் கொண்டுள்ளன. இது தான் யுத்தத்தின் போக்கு. ஹோமூஸ் சமுத்திர சந்தியை மூடல், எரிபொருள் களஞ்சியங்களுக்கு தாக்குதல், எரிபொருள் கப்பல்களை தாக்குதல்,துறைமுகங்களை தாக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகிறது. வலு சக்தி சந்தையில் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது சரியா தவறா, நியாயமானதா என்பது வேறு பிரச்சினை.
வலு சக்தி சந்தையில் உற்பத்தி, சேமித்து வைத்தல் மற்றும் விநியோக பொறிமுறை முடங்கியுள்ளது. இன்று உற்பத்தி,களஞ்சியம் மற்றும் விநியோக சங்கிலி முடங்கியுள்ளது. இதனால் எரிசக்தி துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது யுத்தத்தின் ஒரு மூலோபாயமாக உள்ளது. இந்த யுத்தத்தின் முக்கிய நோக்கம் இதனுடன் தொடர்புபட்டதாகவே உள்ளது.
விசேடமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி எமது இறக்குமதிகள் ஆகும். எரிபொருள் பெற நீண்ட கால விலை மனுக்களை வழங்கியிருந்தோம். ஆனால் இரு டெண்டர்களை உரிய காலத்தில் பெற முடியாதுள்ளது. அவை தாமதித்தே எரிபொருள் விநியோகிப்பதாக அறிவித்துள்ளன. அடுத்து தனியார் விநியோகஸ்தர்களின் ஒரு கப்பல் உரிய காலத்தில் விநியோகம் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு உள்ளது.
இதில் முகாமைத்துவ செயல்முறையொன்று உள்ளதோடு ஒரு கப்பல் தாமதமாக வந்தால் கூட முழுக் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்படும். வரையறுக்கப்பட்ட வளங்களின் ஊடாகவே நாம் வலுசக்தி துறையை நிர்வகிக்கிறோம். எரிபொருள் விநியோகம் உரிய காலத்தில் கிடைக்காத நிலையில் நாம் எமது முன்னெடுப்பு எவ்வாறு இருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு எமது பொருளாதாரத் துறை குறிப்பிடத்தக்க இலக்குகளை எட்டிய வருடமாகும். இந்த பொருளாதார வெற்றிகளை தொடர்ச்சியாக பேணி இந்த நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதே எம்முன் உள்ள சவாலாகும். பொது மக்களும் தமது வாழ்க்கைப் போக்கில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
மக்களின் வாழ்வையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது என கவனிக்க வேண்டும். இந்த வலு சக்தி நெருக்கடியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக பொருளாதார கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு குறுகிய காலத்தில் கூடி நிலைமைகளை மீளாய்வு செய்கிறது.


