எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர்

எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர்
  • :
எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் வலியுறுத்து
 
நாளைய தலைவர்களான மாணவ சமூகத்தினர் பெரியோரை மதிப்பவர்களாகவும், தார்மீக விழுமியங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது அவசியம் என கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் வலியுறுத்தினார்.
கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
 
கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர்,மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படும் நபர்கள் சட்டங்களை மதிக்கும் ஒழுக்கசீலர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும், இந்த நிதியத்தை பிரதேச செயலகங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
 
கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.
இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு பிரதி சபாநாயகர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், கண்டி வித்யார்த்த கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எஸ். ஸ்ரீலால் நன்றியுரை நிகழ்த்தினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, கண்டி வித்யார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles