டெங்கு பரவலுக்கு மத்தியில் 14 மாவட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தீவிர கவனம்

டெங்கு பரவலுக்கு மத்தியில் 14 மாவட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தீவிர கவனம்
  • :
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று (15ஆம் திகதி) முற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.

 இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய டெங்கு நோய் பரவலுக்கு மத்தியில் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதற்கு இணங்க சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை அமைப்பைத் தயார்படுத்துதல், டெங்கு நுளம்புகள் ஒழிக்கும் கள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் முன்னேற்றம், கள வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தடைகள், இந்த வேலைத்திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளூராட்சி மன்றங்கள், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்தும், பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் திட்டங்கள் குறித்தும் மிக விரிவாக ஆராயப்பட்டது.

 
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களைச் சுறுசுறுப்பாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விசேடமாக, இந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அமைப்புகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
 
அத்துடன், சிகிச்சை சேவைகளுக்குத் தேவையான விசேட அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகளையும் முறையான வகையில் செயற்படுத்துமாறு வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களுக்கு மிக பரந்தளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அவசர ஊடக வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
மேலும், இன்று (15) முதல் அடுத்த (20) ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் செயற்பாடுகள் மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து மிக நீண்ட நேரம் கலந்துரையாடிய அமைச்சர்; டெங்கு வேகமாகப் பரவி வரும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய 14 மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரையும் அழைத்து, பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைப்புடன் மிக விரைவில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தினார்.
 
இப்பணிகளை அவசர மற்றும் முன்னுரிமை சேவைகளாகக் கருதி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய விதம் குறித்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பாக அமைச்சர் இங்கு அதிகாரிகளுடன் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அதனுடன் தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பை உரிய பிரிவுகளிடம் ஒப்படைத்தார்.
அத்துடன், டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பது தொடர்பாக சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்தும் அமைச்சர் இங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கலந்துரையாடலின் போது அதிகாரிகளுக்கு குறிப்பிட்டார்.
 
இக்கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட நிபுணர் மருத்துவர் அனில் ஜாசிங்க, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக இயக்குநர் மருத்துவர் கபில கன்னங்கர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொற்றாத நோய்கள் பிரிவு) விசேட நிபுணர் மருத்துவர் சமபிகா விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பல் மருத்துவ சேவைகள்) மற்றும் கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் சந்தன கஜநாயக்க, சமூக விசேட மருத்துவர் புத்திக மகேஷ், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ விசேட மருத்துவர் ஜகத் அமரசேகர, சமூக மருத்துவப் பதிவாளர் மருத்துவர் நதீஷானி வல்விட்ட, பூச்சியியலாளர் சகுந்தலா ஜானகி உள்ளிட்ட சுகாதார மற்றும் ஊடக அமைச்சினதும், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினதும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Articles