நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகளால் கடந்த 2026.07.13 அன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 400/- ரூபாவிற்கு செய்யப்பட வேண்டிய FBC பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்று 550/- ரூபா வீதம் அறவிட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் அதிகாரசபையால் வழக்குத் தொடரப்பட்டதுடன், 2026.07.21 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, பிரதிவாதி மருத்துவமனைக்கு 30 இலட்சம் ரூபா (3 மில்லியன்) பிரமாண்ட அபராதம் விதித்ததுடன், அவர்கள் செய்த தவறு குறித்து அவர்களின் சொந்தச் செலவிலேயே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுமாறும் (Publication to Paper) கௌரவ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறான விடயங்களின் போது நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது,பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நுகர்வோரை வலியுறுத்துகிறது.
"நீங்களும் ஒரு தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகத்தில் சேவைகளைப் பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து அவதானமாக இருங்கள். எப்போதும் நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பற்றுச்சீட்டைப் (Receipt) கோரிப் பெறுங்கள். அது உங்களின் உரிமை என்பதுடன், அவசர காலத்தில் முக்கியமான சான்றாகவும் அமையும். கட்டுப்பாட்டு விலையை விட அதிக பணம் அறவிடப்பட்டால் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக உடனடியாக நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யுங்கள்!"


