🔸 சபா மண்டபத்தில் கௌரவ சபாநாயகரினால் விசேட வரவேற்பு
ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச இளைஞர் தினத்துடன் இணைந்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 அங்கத்தவர்களுக்கு விசேட பாராட்டு நிகழ்வு நேற்று (19) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பங்குபற்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித்தவிசாளர் ஹேமாலி வீரசேகர, இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சரும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களை முதலாவதாக சபா மண்டபத்தில் கௌரவ சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்து வரவேற்றார். அதனை அடுத்து அவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அவர்களுக்கான விசேட பாராட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, வரலாற்றில் முதன்முறையாக தேசிய சம்மேளனத்துக்கு பெண் அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இளைஞர்கள் தொடர்பில் வரலாற்றில் கட்டியெழுப்பப்பட்டுள்ள கதையை மாற்றி புதிய அணுகுமுறையில் கதையைக் கட்டியெழுப்பும் தேவையை வலியுறுத்திய கௌரவ பிரதமர் அதற்கு தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, 1993 ஆம் ஆண்டின் பின்னர், அதாவது 32 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாண்டில் தேசிய இளைஞர் மாநாடொன்றின் மூலம் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்கால பரம்பரையான இந்நாட்டின் இளைஞர்கள் சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்குதல் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் இந்த புதிய அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் எனவும் கௌரவ சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்நிகழ்வில் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் அங்கத்தவர்களின் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதனையடுத்து, அவர்களுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரினால் பாராட்டுச் சின்னக்களும் வழங்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளரும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளருமான எம். ஜயலத் பெரேரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் (சட்டத்தரணி) சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


