கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நிலையம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சரினால் திறந்துவைப்பு!!
கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நிலையத்தினை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் (04) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவீ அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பேக்கேஜிங் வழிகாட்டுதல், லேபிளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கல், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட சேவைகள் இங்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


