சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரைமச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை முறைகளுக்கமைய இதனை மேற்கொள்வதற்கு இரு நாடுகளும் உரிய நடவடிக்கை முறைகள் தொடர்பாகப் பரிசோதித்தல், தொற்றுக் காப்பு மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளடக்கிய தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் சீனா சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் அமைச்சுக்கிடையில் கையொப்பமிடுவதற்கு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.