நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்பார்வை இழக்கப்பட்ட 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
• 12 நோயாளர்களுக்கு 1,000,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்
• 02 நோயாளர்களுக்கு 750,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்
• ஒரு நோயாளிக்கு 700,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்
• 02 நோயாளர்களுக்கு 250,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்
நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக தொழிநுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவால் குறித்த விடயங்களை ஆராய்ந்து செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் அச்சம்பவத்தால் பாதிப்புக்குள்ளாகிய நோயாளர்களுக்கு இழப்பீடுகளைச் செலுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.