சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் பங்களிப்புடன் கடந்த வருட பெரும்போகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4471 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டு அறுவடை செய்த கிட்டத்தட்ட 16 இலட்சம் கிலோகிராம் நெல் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.பி.பி பெர்னாண்டோ (ஓய்வு) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அனைத்து நெல் அறுவடைகளும் மக்களின் நுகர்வுக்காக அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இது தவிர, சுமார் 305 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிரிடப்பட்டு, அதன் அறுவடை ஏற்கனவே மேட்கொள்ளப்பட்டு வருகிறது. சிவில் பாதுகாப்பு திணைக்களம் தென்னையை பொருளாதார பயிராகவும் பழங்கள், மரக்கறி, பருப்பு, எள் போன்றவற்றையும் பயிரிட்டு சந்தைக்கு விடுவதன் மூலம் இலங்கையின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதன் அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.