இந்தியாவினால் இலங்கை இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் நேற்று முன்தினம் (16 ஜூன்) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டை, பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பெறுமதியுடைய இராணுவப் பொருட்கள் மற்றும் காயமடைந்தோருக்கான சிகிச்சை பராமரிப்பு அமைப்பு உள்ளடக்கிய இந்த நன்கொடை, இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, இந்நிகழ்வின் போது இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவிடம் (ஓய்வு) இந்நன்கொடையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் பங்கேற்றார். இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தினால் வழங்கப்பட்ட இந்நன்கொடையை பொருட்கள், மீள்வருகை நடவடிக்கையின் (Operational Turnaround Visit) ஒரு பகுதியாக , 2026 ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய கடற்படைக் கப்பலான “INS Sharda” மூலம், இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் :-
இந்திய இராணுவத்தின் செயற்பாட்டு கையிருப்பிலிருந்து வழங்கப்பட்ட இந்தப் பொருட்கள், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையிலான வலுவான மற்றும் நீடித்த உறவின் சான்றாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், பயிற்சி மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தாண்டி பாதுகாப்புத் திறன் மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இராணுவ உபகரணங்கள் மற்றும் பயிற்சி உதவிப்பொருட்கள் வழங்குதல் போன்ற துறைகளுக்கும் விரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ திட்டத்தின் கீழ் தித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய துரித உதவிகளை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர், இதன் போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு ஆதரவு உள்ளிட்ட உதவிகள் இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் நிறுவனமயப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்ததுடன், எதிர்காலத்தில் மேலும் ஆழமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தையும் அமைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் செயலாளர் தனதுறையின் போது :- இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு அதன் தொடர்ச்சியான உதவிகளுக்கும் நிலையான நட்புறவிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளால் இரு நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவை பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி உதவி, கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த பதிலளிப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்துறை கூட்டாண்மையாக வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகள் நீண்டகாலம் நிலையாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் வலுப்பெற்று வருவதாகவும், இலங்கை மற்றும் இந்திய ஆயுதப் படைகள் நெருங்கிய தொழில்முறை ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இந்தியாவை நம்பகமான மற்றும் விசுவாசமான பங்காளியாக வர்ணித்த அவர், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார மீட்பு முயற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சவாலான காலங்களில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், தித்வா சூறாவளியின் போது இந்தியா வழங்கிய உதவிக்காக நன்றி தெரிவித்த அவர், அது பிராந்திய ஒத்துழைப்பு, திறமையான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசர காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா கொண்டுள்ள தயார்நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் மற்றும் லெப்பிடினண்ட் கேர்ணல் மந்தீப் சிங் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


