பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இன்று (மார்ச் 25) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா–இலங்கை பாதுகாப்பு தொழில்துறை கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை, இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா வரவேற்றார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் மூன்றாம் தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இக்கருத்தரங்கு “Identifying New Opportunities and Forging New Bonds” என்ற தலைப்பில் இம்முறை நடத்தப்படுகிறது.
இங்கு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா–இலங்கை இடையிலான நீடித்த கூட்டாண்மையை வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தித் துறை இலங்கைக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்குகின்றது எனக் குறிப்பிட்டார். நம்பகமான மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்பங்களுக்கு அணுகல், பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் ஆகியவை இலங்கையின் செயற்பாட்டு தயார்நிலையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மூலோபாய ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


