இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்
  • :

இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing அவர்கள், நேற்று (2026 ஜூலை 14) பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சினேகபூர்வமான சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நிலவிவரும் நீண்டகால இருதரப்பு உறவுகளை இரு தரப்பினரும் மீள உறுதிப்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதனை நினைவுகூரவுள்ளமை குறித்தும் கலந்துரையாடினர்.

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் நட்புறவையும் மேம்படுத்துவதற்கான முக்கிய வழிகளாக கலாசாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதன் அவசியமும், குறிப்பாக சுற்றுலாத் துறையின் ஊடாக இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவமும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டன. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவிவரும் வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டுறவுகள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.

கூட்டுறவினை மேலும் அதிகரிப்பதற்கான கணிசமான சாத்தியக்கூறுகள் இருப்பதை இனங்கண்டு, அதற்கு அமைய ஆடைத் தொழில் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்தோனேசியா ஆர்வமாக உள்ளதாகத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிபுணத்துவம், அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் ஊடாக விவசாயத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்தோனேசியக் குடியரசுத் தூதரகத்தின் ஆலோசகர் Yadi Suriahadi, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் (தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா) திரு. மகேஷ் ஹேமதிலக ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles