இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்
இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடியது.
இந்த ஒன்றியம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே அந்தப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றியத்தை அறிவுறுத்தியதுடன், இவ்வாறு முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
இயலாமையுள்ள நபர்களுக்காக அனைத்துத் தேர்தல்களிலும் குறிப்பிட்ட ஒரு ஒதுக்கீட்டை ஒதுக்குமாறு பிரதிநிதிகள் முன்மொழிந்தனர். அத்துடன், இயலாமையுள்ள நபர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையத்தளமொன்றை தயாரிக்குமாறு ஒன்றியத்துக்கு முன்மொழிந்ததுடன், இந்த இணையத்தளத்தை கையடக்கத்தொலைபேசி ஊடாகவும் பிரவேசிக்க முடியுமான வகையில் தயாரிக்குமாறு தெரிவித்தனர்.
அத்துடன், பிரேல் ஊடாக கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இயலாமையுள்ள நபர்கள் தொடர்பில் புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, செவிப்புலன் குறைபாடு கொண்ட நபர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகக் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இயலாமையுள்ள நபர்களுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு முன்மொழியப்பட்டது.
இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.