எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்
- சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மே மாதம் 15 ஆந் திகதி கண்டி கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தாதியர் தினம் - 2025 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
தாதியர் தொழிலை அறிமுகப்படுத்திய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 205வது பிறந்தநாளை முன்னிட்டும், உலகம் முழுவதும் தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட ஒரு மன்றத்தை உருவாக்கும் நோக்குடனும், ‘எமது தாதியர் எமது எதிர்காலம் - தாதியர்களைப் பாதுகாப்பது பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது" என்ற கருப்பொருளின் கீழ் இவ்வருட சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தாதியர் தொழில் தொடர்பாக எழுதப்பட்ட “ஹெதகம" சஞ்சிகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
தாதியர்களாக நீங்கள் சுமந்திருக்கும் பொறுப்பு மற்றும் உங்கள் சேவையைப் பற்றி சிந்திக்க இன்று நம் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்மையில் கரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட போக்குவரத்து அமைச்சரும் நானும் கம்பளை மருத்துவமனை மற்றும் பேராதனை மருத்துவமனைக்குச் சென்றோம். நான் ஒரு மருத்துவமனைக்குச் செல்வது இது தான் முதல் முறை இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும், எங்கள் தாதியர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பார்த்து நான் வியப்படைகிறேன். எனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தாதியர்களின் அர்ப்பணிப்பை நான் நேரில் கண்டேன்.
கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் உள்ள அந்த தாதியர் சகோதர சகோதரிகளிடம் நான் உரையாடினேன். தாதியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தன. ஒரு தாதி, தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இரவுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். அப்போது அவரது குடும்பம் எங்கே என்று நான் கேட்டேன், அந்த சகோதரி சிரித்தார், " குடும்பத்தைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லை." பிள்ளைகளை அவரது தாயார் கவனித்துக்கொள்கிறார்கள், அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள், அவர்கள் தங்கள் கணவரை கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இல்லை.
உண்மையில் இவ்வாறு வேலை செய்வது எவ்வாறான நிலை? எல்லாம் சரியாக இருக்கும் சூழ்நிலையில் அல்ல நாங்கள் வேலை செய்வது. வீழ்ந்து, சரிந்துபோயுள்ள ஒரு முறைமையை மீண்டும் கட்டியெழுப்பும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
தாதியர் தொழிலில் 95 சதவீதம் பேர் பெண்கள். இது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்று என்றோ அல்லது பெண்கள் மட்டுமே செய்யும் ஒனறு என்றோ நான் நினைக்கவில்லை. நூற்றுக்கு 95 சதவிகிதத்தினர் எப்படிப் பெண்களாக மாறினர் என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
பெண்களாகிய எமக்கு இயற்கையான திறமை ஏதாவது இருக்கிறதா என்றும் நான் சிந்தித்தேன்.
எந்தவொரு வேலையிலும் தொழில் பாதுகாப்பு பற்றிப் பேசும்போது, அது வெறும் சம்பளத்தைப் பற்றியது மட்டுமல்ல. பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழல் மற்றும் தொழிற் சூழலில் பாதுகாப்பு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தொழிற்சூழல் பாதுகாப்பற்றதாக மாறும் நேரங்கள் உள்ளன. பெண்கள் பெரும்பாலும் இரவு நேர வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், தொலைதூர இடங்களில், போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், தங்களை விட சக்திவாய்ந்தவர்களால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், ஒரு பெண்ணாக, நீங்கள் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு, தேவையான சமூக சூழலும் வசதிகளும் தேவை. பெண்களாக நாம் எடுக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற நாம் என்ன வசதிகள் மற்றும் ஆதரவை வழங்குகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது, மகிழ்ச்சி மற்றும் ஆறுதல். அத்தகைய வாழ்க்கையை அடையக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். கடினமான தெரிவுகளை எடுக்காமல், எளிதான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த தாதியர் தின கருப்பொருள் உரை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தாதியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் நடக்க வேண்டியது என்னவென்றால், தாதியர்களை வலுப்படுத்தும் ஒரு பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கருவிகளாக மாறினால், நாம் எப்படி எளிதான வாழ்க்கையை வாழ முடியும்? பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை வைத்தியசாலை நிலைகளைத் தாண்டி, ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் பிரிவுகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கை உள்ளது, இது எதிர்காலத்தில் 25% ஐ எட்டும். அந்த மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, அவர்களை அங்கேயே பராமரித்து அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க தேவையான வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
எங்கள் அடுத்த இலக்கு தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும். எங்கள் மருத்துவமனைகளின் படுக்கை வசதி மிகப் பெரியது. உங்கள் சேவைகளை மட்டுமே பெற்று ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவது கடினம், எனவே இந்த ஆண்டு 3,147 தாதியர் நியமனங்களை வழங்க நாங்கள் நடவடிக்கைஎடுத்து வருகிறோம். இணை சுகாதார பட்டதாரிகளையும் மீதமுள்ள 305 தாதியர் அதிகாரிகளையும் ஆட்சேரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் பிரதமர் அலுவலகத்தின் வெற்றிடங்கள் சம்பந்தமான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.
தற்போதுள்ள தாதியர்களின் எண்ணிக்கையை 40,000 லிருந்து 60,000 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களுக்குள் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தாதியர் பட்டம் வழங்குவது தொடர்பாக பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது நாங்கள் சில முடிவுகளை எடுத்தோம். சுகாதார அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து, தாதியர் பட்டங்களை முறையான முறையில் வழங்க நாங்கள் தற்போது திட்டமிட்டுள்ளோம்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தின் பேராசிரியர் தமயந்தி தசநாயக்க, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவ ஆரச்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2025.05.15