கெரண்டியெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (14) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த விபத்து குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர், இதனால் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு அதிகபட்ச நீதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
'விபத்தில் உயிரிழந்த இருபத்தி மூன்று பேருக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை அவர்கள் வாழ்ந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களின் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாவலர்களை அடையாளம் கண்டு, அந்தப் பணத்தை உடனடியாக அவர்களிடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'
மேலும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், குறுகிய கால மற்றும் நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். நோயாளிகளின் சார்பாக விசேட அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவாக வழங்க தனிப்பட்ட முறையில் தலையிட்டோம். காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வழங்கக்கூடிய இழப்பீட்டை வழங்க நாங்கள் தலையிடுகிறோம்.
இந்த விபத்து குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவை தனித்தனி விசாரணைகளை நடத்தி உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளளதனால், திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.