025 மே 4 முதல் 6 வரை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் வியட்நாம் சோசலிசக் குடியரசும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசும் வெளியிட்ட கூட்டு அறிக்கை
- வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 மே 4 - 6 வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் வியட்நாம்-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவை (1970 - 2025) நினைவுகூரும் வகையில் இடம்பெற்றது.
- 2.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு மிகவும் மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லெம், ஜனாதிபதி லுவாங் குவோங், பிரதமர் பாம் மின் சின் மற்றும் தேசிய சபையின் தலைவர் டிரான் தான் மான் ஆகியோருடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னாள் வியட்நாம் ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள், கலாச்சார மரபுகள் மற்றும் ஆழமான புரிதலின் அடிப்படையில் இரு நாடுகளின் தலைவர்களால் பல தலைமுறைகளாக கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நட்புறவின் நெருங்கிய பிணைப்பைக் குறிக்கும் வகையில் படை வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கான போர் நினைவுச்சின்னத்தில் ஜனாதிபதி மலர்அஞ்சலி செலுத்தினார்.
- 3. வியட்நாம் பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் வியட்நாம் அரசாங்கத்தின் ஒருங்கிணைத்த அழைப்பை மதித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,2025 மே 6 ஆம் திகதி ஹோ சி மின் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் பிரதான உரையை நிகழ்த்தினார்.
4. வியட்நாம் அரச தலைவர்களுக்கும் ஜனாதிபதி திசாநாயக்கவிற்கும் இடையில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. 1970 ஜூலை 21 ஆம் திகதி இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை அவர்கள் திருப்தியுடன் கலந்துரையாடினர். இது உயர் மட்ட அரசியல் நம்பிக்கை, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பும் சிறந்த ஒத்துழைப்பும், எதிர்வரும் ஆண்டுகளில் வியட்நாம் மற்றும் இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளன என்பதை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
5. சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் வியட்நாம் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வளமான உற்பத்தி மையமாகவும் வியட்நாமை மாற்றுவதில் அந்நாட்டின் தலைமையின் வெற்றியையும் ஜனாதிபதி பாராட்டினார். அண்மையில் நிறைவடைந்த இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி மற்றும் இலங்கையின் மூலோபாய புவியியல் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு பொருளாதார மையமாக இலங்கை முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்த வியட்நாம் நாட்டுத் தலைவர்கள், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி என்பவற்றுக் தமது வாழ்துக்களைத் தெரிவித்தனர்.
6. இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய முக்கிய திசைகள் குறித்து இரு தரப்புத் தலைவர்களும் ஆராய்ந்து உடன்பாடுகண்டனர். அரசாங்கங்களின் உயர் மட்ட வருகைகள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துதல், பல்வேறு மட்டங்களில் பிரதிநிதிகளின் பரிமாற்றங்கள் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வியட்நாம் மற்றும் இலங்கை இடையே நெருக்கமான அரசியல் உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர்.
7. தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு பொறிமுறைகளை திறம்பட செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சூழலில், இரு வெளியுறவு அமைச்சுக்களுக்கிடையில் 5 ஆவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை முன்கூட்டியே கூட்டுதல், வர்த்தகத்திற்கான உபகுழுவின் 3 ஆவது கூட்டம் மற்றும் வியட்நாம் மற்றும் இலங்கை இடையேயான பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக் குழுவின் 4 ஆவது கூட்டம் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னுரிமைகளாக அடையாளம் காணப்பட்டன.
8. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுவாக பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இது சம்பந்தமாக, வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அகாடமிக்கும் இலங்கையின் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் பரிமாற்றம் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து புதுப்பிக்கவும், பாதுகாப்பு பிரதிநிதிகளின் பரிமாற்றத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பு ஆய்வுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர். கல்வி மற்றும் பயிற்சி, உளவுத்துறை பகிர்வு மற்றும் பிரதிநிதிகளின் பரிமாற்றம், ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வது ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். பயங்கரவாதம், சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சைபர் குற்றம் உள்ளிட்ட நாடுகடந்த குற்றங்களை எதிர்ப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இரு தரப்பினரின் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, வியட்நாமும் இலங்கையும் இரு நாடுகளின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.
9. வியட்நாம் மற்றும் இலங்கை இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் பெரும் ஆற்றல் உள்ளது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். வேகமாக வளர்ந்து வரும் உலகப் பொருளாதார சூழலின் பின்னணியில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்காக வியட்நாம் மற்றும் இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தங்களை முடிப்பது மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட வலுவான ஒத்துழைப்பை ஊக்குவிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
10. எதிர்காலத்தில் வர்த்தக வருவாயை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன், வர்த்தக வசதிகள் அளித்தல், தகவல் பரிமாற்றம், வர்த்தகப் நடவவடிக்கைகள் மூலம் வணிக தொடர்புகளை மேம்படுத்துதல் அத்துடன் வணிகப் பொருத்தம், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொருவரினதும் பலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒத்துழைப்புடன் செயற்படுடுவும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகத்தை அடையாளம் கண்டு தொடரவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
11. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான முதலீட்டுத் திட்டங்களை அதிகரிக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். 2025 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி, 43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட மூலதனத்தைக் கொண்ட 33 திட்டங்களில் இலங்கையின் முதலீடுகள் தொடர்பில் வியட்நாம் தரப்பு பாராட்டுத் தெரிவித்தது.
12. வியட்நாமின் பொருளாதார வளர்ச்சியில் நிலையான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறிப்பாக விவசாயம், உணவு தயார்படுத்தல், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு மற்றும் வாகன உதிரிப்பாகங்கள், ஆதன வணிகம், விருந்தோம்பல், மருந்துகள், மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, விநியோகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கைத்தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் வியட்நாமில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்க இலங்கை ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
13. இரு நாடுகளுக்கும் இடையே தற்பொழுது காணப்படும் விமானச் சேவை ஒப்பந்தங்களின் அடிப்படையில் விமானத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் . இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு விமான இணைப்பு ஒரு வலுவான ஊக்கமாக இருக்கும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பில், இரு நாடுகளின் விமான நிறுவனங்கள் நேரடி விமானங்களை விரைவில் தொடங்குவதை ஊக்குவிக்க இரு தரப்பினரும் உடன்பாடு கண்டனர். சுற்றுலா, வணிகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பயண வசதிகளை எளிதாக்குவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
14. விவசாயத் துறையில் ஒத்துழைப்புக்காக தற்பொழுது காணப்படும் விசேடமான மூலங்களை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். குறிப்பாக தானியங்கிமயமாக்கல், இயந்திரமயமாக்கல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, அறுவடைக்குப் பிந்தைய செயலாக்கம் போன்ற துறைகளில், வியட்நாம் தனது விவசாயத் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு விவசாய நவீனமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்க வியட்நாம் நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
15. வியட்நாம் விவசாயப் பொறியியல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனம் (VIAEP), தேசிய அறுவடைக்குப் பிந்தைய விவசாய நிறுவனம் (NIPHM) மற்றும் இலங்கையின் பண்ணை இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையம் (FMRC) ஆகியவை வியட்நாம் விவசாய அறிவியல் அகாடமி மற்றும் இலங்கை விவசாயத் துறையுடன் இணைந்து, விவசாயத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வளர்ச்சியை வளர்க்கவும், இரு தரப்பினருக்கும் மதிப்புமிக்க அறிவைப் பரிமாறிக் கொள்ள உதவவும், 2024-2026 காலகட்டத்திற்கான விவசாய வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டன. விவசாயத் துறையில் நிபுணர்களுக்கான குறுகிய கால ஆய்வுச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வசதி செய்யவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
16. தொல்பொருள் ஆய்வு மற்றும் கலாச்சார தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் வியட்நாமிற்கு உதவ இலங்கையின் விருப்பத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வளமான பாரம்பரியத்தையும், பண்டைய தளங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் விரிவான அனுபவத்தையும் கொண்ட இலங்கை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்கும் வியட்நாமின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக நிபுணத்துவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. இந்த அறிவு நன்கொடையை வியட்நாமிய தரப்பு நன்றியுடன் ஏற்றுக்கொண்டது.
17. இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளைத் தலைவர்கள் வலியுறுத்தினர். 2023 ஆம் ஆண்டில் பாய் டின் ஆன்மீக வளாகத்திற்கு இலங்கை நன்கொடையாக வழங்கிய புனித போதி மரக் கன்றைச் சுற்றி வெளிப்புறச் சுவரைக் கட்டும் திட்டத்தில் இரு தரப்பினரின் கூட்டுச் செயற்பாட்டிற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.இது உண்மையான இலங்கை கட்டிடக்கலை சிற்பங்கள் மற்றும் தனித்துவமான வியட்நாமிய வடிவமைப்புடன் கட்டப்பட்ட ஒரு சுவராகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் ஆன்மீக ஒத்துழைப்புக்கு இது ஒரு சான்றாகும்.
18. 1999 இல் கையெழுத்திடப்பட்ட கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது தொடர்பில் இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி ஒத்துழைப்புக்கான வேலைத் திட்டத்தில் கையெழுத்திட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இரு தரப்பினரும் ஊக்குவித்தனர். இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.மேலும் பல்வேறு கல்வித் துறைகளில் மாணவர் பரிமாற்றத் திட்டங்களை எளிதாக்குவதற்கான பரஸ்பர விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
19. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் துறைகளில் புலமைப்பரிசில் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எடுத்துரைத்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, வியட்நாம் தரப்பு புத்த மதக் கல்வித் துறையில் புலமைப்பரிசில் வாய்ப்புகளை வழங்க விருப்பம் தெரிவித்தது.
20. செயற்கை நுண்ணறிவு (AI), ஈ- வணிகம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் ஆகிய துறைகளில் தங்கள் பலங்களை இரு தரப்பினரும் அங்கீகரித்ததோடு நிலையான அபிவிருத்தி, முன்னேற்றப்பட்ட பொது சேவை வழங்கல் மற்றும் புத்தாக்கம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். திறன் அபிவிருத்தி, அறிவு பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
21. பிராந்திய மற்றும் பல்தரப்பு அமைப்புகளில் இரு நாடுகளும் வழங்கும் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். உலகளாவிய தெற்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேலும் விரிவுபடுத்தவும் உடன்பாடு காணப்பட்டது.
22. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) கூறப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய இரு தலைவர்களும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு, குறைந்த தகவமைப்பு திறன் காரணமாக விகிதாசார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய, அணுகக்கூடிய காலநிலை நிதியின் அவசரத் தேவையை வலியுறுத்தினர். புவி வெப்பமடைதலை திறம்பட குறைப்பதற்கும் கடல் மட்ட உயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புது நிதியியல் வழிமுறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
23. 2025 ஆம் ஆண்டு வியட்நாமின் ஹனோய் நகரில் சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கையொப்பமிடும் வாய்ப்பை இலங்கை வரவேற்பதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது.
24.சமாதானம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கையும் வியட்நாமும் மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் நிலையான மற்றும் அமைதியான சர்வதேச கடல்சார் அமைதியைப் பேணுவதற்காக, சர்வதேச சட்டத்தை, குறிப்பாக 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டம் தொடர்பான சமவாயத்தை (UNCLOS) மதித்து பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.
25. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தனது ஆட்சியின் கீழ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கொள்கையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்தார். இந்தக் கொள்கை நிலைப்பாட்டை வியட்நாம் ஒப்புக்கொண்டதோடு நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தியது. இது தொடர்பாக, 2023 - 2026 காலகட்டத்தில் அனர்த்த நிவாரணம் தொடர்பான இடை-அமர்வு கூட்டத்தின் இணைத் தலைவர்களாக ஆசியான் பிராந்திய மன்றத்தில் (ARF) வியட்நாமும் இலங்கையும் ஆற்றிய தீவிரப் பங்கிற்கு இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக மாறுவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வியட்நாம் தரப்பு கவனத்திற் கொண்டது.
26. இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள், குறிப்பிட்ட மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் வியட்நாம் மற்றும் இலங்கை இடையே வலுவான ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகவும், பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்றும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
27. இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த உறவை மேலும் மேம்படுத்தவும் உயர்த்தவும் பரஸ்பர புரிதலுடன் நடத்தப்பட்ட இந்த பயனுள்ள கலந்துரையாடல்கள் குறித்து தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
28. வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது கிடைத்த மகத்தான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக வியட்நாம் அரசிற்கும் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதான செயலாளர் டோ லாம் மற்றும் ஜனாதிபதி லுவாங் குவோங் ஆகியோருக்கு வசதியான சமயத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-05-08