போரின் தீப்பிழம்புகளை அணைத்து, அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்ப புத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் - 20 ஆவது ஐக்கிய நாடுகள் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதான உரையில் தெரிவிப்பு

போரின் தீப்பிழம்புகளை அணைத்து, அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்ப புத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் - 20 ஆவது ஐக்கிய நாடுகள் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதான உரையில் தெரிவிப்பு
  • :

போரின் தீப்பிழம்புகளிலிருந்து நீங்கி, அமைதி நிறைந்த உலகில், அனைத்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உருவாக்க, பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நேற்று (06) ஆரம்பமாகிய 20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதான உரையாற்றும்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

"மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை: உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்" என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டத்தில், இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய பௌத்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் நாடுகள் மற்றும் 85 பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2,800 பேர் இதில் கலந்து கொண்டார்கள்.

ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அங்கு பிரதான உரையையும் நிகழ்த்தினார்.
போருக்குப் பின்னர், பலருக்கு துயரமும் வலியும் மாத்திரமே எஞ்சியுள்ளன என்றும், அமைதி மற்றும் ஒழுக்கத்தின் மூலம் மாத்திரமே வலியைத் தடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
மெத்தா , கருணா ,முதிதா , உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி, தீய எதிரிகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை பௌத்த தத்துவம் காட்டியுள்ளது.புத்தரால் போற்றப்பட்ட தர்மம் உலகில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் விட சக்தி வாய்ந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:
"விடாமுயற்சி, எல்லையற்ற உறுதிப்பாடு, குறிப்பிட்ட அர்ப்பணிப்பு, மூலோபாய இலக்கு மற்றும் தனித்துவமான பிரதிபலன்கள்,வேகமாகவும், முன்மாதிரியாகவும் வளர்ந்து வரும் ஒரு நாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களில் முக்கிய உரையை நிகழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகால அழுகை மற்றும் புலம்பல்களின் வேதனையான அனுபவங்கள் இருந்தபோதிலும், இதையெல்லாம் மீறி தைரியமாக எழுச்சி பெறுவதற்கான பாதையை உருவாக்கிய அற்புதமான நாடு வியட்நாம். வரலாற்றில் மிக மோசமான இரசாயன ஆயுதத் தாக்குதல்களால் மிகவும் கொடூரமான அநீதிக்கு ஆளான உங்கள் நாட்டின் சாதனைகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எனவே, உங்கள் நாட்டை உறுதிப்பாட்டின் பூமி என்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதேபோல், இன்னும் சில நாட்களில் கொண்டாடவுள்ள புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் மீட்சியை நினைவுகூர்கிறது. வெசாக் பண்டிகையுடன் இணைந்து நடத்தப்படும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களை நடத்த வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது.
1999 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை வெசாக் தினத்தை சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நாளாக அறிவிக்க முன்மொழிந்தது. இந்தப் பரிந்துரையை இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் சமர்ப்பித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை சர்வதேச வெசாக் தினத்தை அறிவித்து செயல்படுத்தியது. இதற்காக செயற்பட்ட பௌத்த மற்றும் பௌத்தர் அல்லாத மக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
ஒரு வலுவான சமூகத்தில், அதிகாரம் சமமாகப் பகிரப்படுகிறது. சமத்துவம் இல்லாத போது போர் உலகம் கட்டமைக்கப்படுகிறது. 2,500 ஆண்டுகால பௌத்த வரலாற்றில் கௌதம புத்தரின் சமத்துவம் பற்றிய செய்தி எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மத்திய வழி பற்றிய அவரது போதனைகள் இன்று உலக அரங்கில் நடைமுறைச் சாத்தியமாகி விட்டன. சமத்துவத்திற்கான உயிரோட்டமான சான்றாக வியட்நாமை குறிப்பிடலாம். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தின் கருப்பொருள் சமத்துவமாகும்.
நாம் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே, உலகில் எங்கோ மனித நாகரிகத்திற்கு எதிரான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. . போரைப் பற்றி எதுவும் தெரியாத பல்லாயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அதற்குப் பலியாகிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் தங்கள் கணவர்களையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் குழந்தைகள் பெற்றோரையும் இழக்கிறார்கள். இந்த வகையில் பார்த்தால், யுத்தம் மனித நாகரிகத்திற்கு சாதனைகளை விட அதிக அழிவைக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பிறகு, பலருக்கு சோகமும் வலியும் மட்டுமே எஞ்சுகிறது. முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தேசமாக, எமக்கும் அது பற்றிய அனுபவம் உண்டு. அமைதி மற்றும் ஒழுக்கம் மூலம் மட்டுமே இத்தகைய துயரத்தின் வலியைத் தவிர்க்க முடியும். அதைப் புரிந்துகொள்ளும் வரை, நமக்கு துயரங்களும் வலிகளும் மட்டுமே இருக்கும்.

இதுபோன்ற சமயத்தில் அமைதியுடனும் ஒழுக்கத்துடனும் செயல்படுவதன் மதிப்பை 2500 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். இலங்கை தேசமாக, அதன் மதிப்புகளை நாம் உள்வாங்கிக் கொண்டுள்ளோம். நமது நாடு தந்தை-மகள் உறவுகள், உறவினர்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவுகளால் போசிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மக்கள், பிறருடைய உயிரைக் காப்பாற்ற தங்கள் இரத்த தானம் செய்வதை ஒரு தானமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போல இரத்த தானம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், எனது நாட்டிலும் மக்கள் கண்களை தானம் செய்கிறார்கள்.
அதன்படி, நமது நாடு புத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தானம் எனும் எண்ணக்கருவை மிக நெருக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

2,500 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றில், பௌத்தம் அகிம்சை கொள்கைகள் மூலம் பரவியுள்ளது. தம்சக் பெவதும் சூத்திர போதனையில் புத்தர் வழங்கிய தம்மத்தின் செய்தி இன்றும் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு பரவி வருகிறது. புத்தர் நமக்குக் காட்டிய ஒரு பாதை இருக்கிறது. பௌத்தம் காட்டும் பாதை, மனித நாகரிகத்திற்கு துயரத்தைக் கொண்டுவரும் பாதையிலிருந்து முற்றிலும் மாற்றமானது.

புத்தர் போதித்த பாதையில் நாம் முன்னேறிச் செல்லும்போது, கோபம், பொறாமை, வெறுப்பு, தீமை, மாயை போன்றவற்றை எதிர்த்துப் போராடத் தேவையான ஆயுதங்களை புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். பௌத்த தத்துவமானது மெத்தா,கருணா,முதிதா, உபேக்சா ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிரிகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் காட்டியுள்ளது.

புத்தம் ஒருவரின் வாழ்வில் எந்த அளவில் தாக்கம் செலுத்தும் என்பதை அசோக பேரரசரின் ஆட்சிக் காலத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த ஆட்சிக் காலத்தில் முரசொலிக்கு மாறாக, தர்மத்தின் முரசொலி ஒலித்தது. ஒரு காலத்தில் போரினால் இன்பம் கண்டவர்கள், அமைதியின் இன்பத்தை அனுபவித்தனர். ஒரு சமயத்தில் ரோஹினி நதியின் நீரை பகிர்ந்துகொள்ளும் வேளையில் புத்தப் பெருமான் போரை விடவும் சமாதானதம் பெறுமதி மிகுந்தது என்று போதித்தார். எனவே புத்த மதம் எவ்வேளையிலும் போரை விடவும் சமாதானமே சிறந்தது என்பதை போதித்திருக்கிறது.

தற்போது உலகமே ஒரு கிராமமாக மாறியிருக்கும் நேரத்தில், கருணை, அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்ற புத்த மதத்தின் ஆழமான போதனைகள் வழிவகுத்துள்ளன. ஒரு போதகராக புத்த பெருமான் போதித்த ஒழுக்கம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எத்தகையது என்று பார்க்கும்போது, அவரது போதனைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்கு உள்ளாக்குவதால் தர்மம் பற்றிய உண்மையான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சொல்லின் உன்னதமான அர்த்தத்தினால் பௌத்த தர்மம் புரிதலுடன் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும் என்பதை காண்பிக்கலாம். புத்தரின் போதனைகளைப் பின்பற்றி, தற்போது தர்மத்தைப் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் பிக்குகள் உலகம் முழுவதும் சமத்துவத்தின் செய்தியை எடுத்துச் செல்கின்றனர். அந்தச் செய்தியில் எந்த மோதலும், குழப்பமும், இரத்தம் சிந்தல்களும் தண்டனைகளும் இல்லை. அது அமைதிக்கான பாதையாகும்.
வெறுப்பை வெறுப்பினால் வெல்ல முடியாது.

ஆனால், அமைதியால் வெறுப்பை வெல்ல முடியும் என பௌத்தம் போதிக்கிறது. உலகின் அமைத்திக்கான முதலாவது போதகரும் புத்த பெருமான் ஆவார். அவரது போதனைகள் தன் மீது தான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் செய்தியாக அமைந்தது. அதன்படி, பௌத்த தர்மம் வாழ்க்கைக்கு ஆழமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

புத்த பெருமான ஒரு சூத்திரத்தில் நம்மிடமிருக்கும் சொத்துகள் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் போதித்திருக்கிறார். பெற்ற செல்வத்தை எவ்வாறு நுகர வேண்டும் என்பதையும் அந்தச் சூத்திரத்தில் கூறியுள்ளார். அதன்படி ஒரு தொகுதி செல்வம் நுகர்விற்கானது. இரண்டு பகுதிகள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கானது. நான்காவது பகுதி எதிர்பாராத சூழ்நிலைகளில் பயன்படுத்த ஒதுக்கப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
புத்தர் ஆட்சிமுறை குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மனித உரிமைகளை பாதுகாக்க நாட்டில் குற்றங்களை அடக்குதல், நாட்டில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல், ஒழுக்கநெறிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பதற்காக பௌத்த அரசியல் வழிகாட்டல் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. "நாட்டை நிர்வகிக்கும் முதல் பிரஜையான ஆட்சியாளர் ஒழுக்கத்தை பின்பற்றும் பட்சத்தில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள்" என்பதே புத்தர் போதித்த செய்தியாகும்.

அரசு நிர்வாகத்தில் முக்கியமான பத்து கொள்கைகளின் பல பெறுமதிமிக்க விடயங்களை பௌத்த தர்மம் எமக்கு தந்துள்ளது. இந்தக் காரணத்தினால்தான், புத்த மதம் அமைதி மற்றும் சமத்துவத்தின் செய்தியை உள்ளடக்கிய ஒரு மதம் என்று நம்புகிறேன். உலகில் அனைத்தும் நிலையற்றவை என்று புத்தர் போதித்திருக்கிறார்.

எல்லா பாவங்களையும் தவிர்ப்பது, நன்மைகளை செய்வது மற்றும் ஒருவரின் மனதைக் கட்டுப்படுத்துவது என்பதே அனைத்து புத்தத்துவம் பொருந்தியவர்களின் போதனைகளாகும்.

இலங்கையும் வியட்நாமும் பண்டைய காலங்களிலிருந்து நெருக்கமான மற்றும் பரஸ்பர உறவுகளைக் கொண்ட இரண்டு நாடுகள். அது இன்று இன்னும் வலுவடைகிறது. இலங்கையின் தனித்துவத்தை அடியொற்றி பாய் டிங் விகாரையில் நிர்மாணிக்கப்பட் போதி சுவரை திறந்து வைத்தேன். அந்தச் சுவரால் மூடப்பட்டிருப்பது இது 2023 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வியட்நாமுக்குக் கொண்டுவரப்பட்ட ஜய ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும்.

இவ்வாறு, பௌத்தத்தால் ஊக்குவிக்கப்பட்ட நாம், போர் அற்ற அமைதி நிறைந்த உலகம், அன்பு நிறைந்த சமூகம் மற்றும் கருணை நிறைந்த வாழ்க்கைக்காகவும், அனைத்து நாடுகள் மற்றும் அனைத்து மக்களிடையே அமைதி, வளர்ச்சி மற்றும் மரியாதையை உருவாக்குவதற்காகவும் புத்தர் போதித்த போதனைகள் மற்றும் பௌத்த தத்துவங்களிலிருந்து பயன்பெறுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-05-08

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]