மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடுசெய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025" நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 ஏப்பிரல் மாதம் 30 ஆந் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுக்கின்றது.
“கைத்தொழில் பிரிவு” , “தொழில்முயற்சி மற்றும் கருத்திட்டப் பிரிவு” மற்றும் “நிறுவன, வெகுசன ஊடக மற்றும் சமூகப் பிரிவு” எனும் மூன்று பிரதான பிரிவுகளின்கீழ் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதற்கிணங்க “கைத்தொழில் பிரிவு” அனது “பாரிய அளவிலான பிரிவு” மற்றும் “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பிரிவு” என இருபிரிவுகளாக அமையும். இந்த இருபிரிவுகளிலும் தனித்தனியாக 16 துணைப் பிரிவுகள் வீதம் காணப்படுகின்றது. "பொதுவான கழிவுப்பொருள் சுத்திகரிப்பு முகாமைத்துவ முறைமைகள்/ திண்மக் கழிவுப்பொருட்களை மீளப்பெறுதல்/ மீள்சுழற்சிசெய்தல், கையகற்றுதல் அல்லது பதப்படுத்தல் கைத்தொழில்கள்", "இரசாயன உற்பத்திக் கைத்தொழில்கள்", "வாகன சேவை நிலையங்கள்", "உணவு பான உற்பத்திக் கைத்தொழில்கள்", "ஹோட்டல்கள்", "புடவை தயாரித்தல் கைத்தொழில்கள்", "ஒளடத உற்பத்திகள் மற்றும் அழகுச்சாதன உற்பத்திக் கைத்தொழில்கள்", "மருத்துவமனைகள்", "இறப்பர்சார்ந்த கைத்தொழில்கள்", "விலங்குப் பண்ணைகள்", "தைத்த ஆடை தயாரிப்புக் கைத்தொழில்கள்", "தேயிலை தயாரிப்புக் கைத்தொழில்கள் அல்லது தேயிலை தொழிற்சாலைகள்", "அச்சிடல் அலுவல்கள் சகிதம் பொதியிடல் பொருட்கள் உற்பத்திக் கைத்தொழில்கள்", "கனிப்பொருள்சார்ந்த உற்பத்திக் கைத்தொழில்கள்", "வெட்டுமரம்சார்ந்த உற்பத்திகள்", மற்றும் "உலோகம்/ இரும்பு அல்லாத உலோகம்/ இயந்திரசாதனங்கள்/ மின்சார/ இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்கின்ற அல்லது ஒன்றுசேர்க்கின்ற கைத்தொழில்கள்" என்பவையே மேற்படி 16 துணைப் பிரிவுகளுமாகும்.
“தொழில்முயற்சி மற்றும் கருத்திட்டப் பிரிவு” கீழே காட்டப்பட்டவாறு ஒரு பிரதான பிரிவினையும் மூன்று துணைப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். அதாவது "புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திப் பிறப்பாக்க கருத்திட்டங்கள்" எனும் பிரதான பிரிவின்கீழ் “சிறிய அளவிலான நீர் மின் கருத்திட்டங்கள்”, “சூரிய வலு மின்சக்திக் கருத்திட்டங்கள்” மற்றும் “காற்று வலு மின்சக்தி பிறப்பாக்க கருத்திட்டங்கள்” என்பவையே அந்த மூன்று துணைப் பிரிவுகளாகும்.
“நிறுவன, வெகுசன ஊடக மற்றும் சமூகப் பிரிவு” என்பதன்கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்ற துணைப் பிரிவுகள் 6 ஆகும். "பாடசாலைகள்", "சுற்றாடல்நேயமுள்ள அரச நிறுவனங்கள்", "சுற்றாடல்நேயமுள்ள தனியார் நிறுவனங்கள்", "சுற்றாடல் பேணலுக்காக செயலாற்றி வருகின்ற அரசசார்பற்ற சுற்றாடல் அமைப்புகள்", "சுற்றாடல்நேயமுள்ள புத்தாக்கங்கள்" ("பாடசாலைகள்", "பல்கலைக்கழகங்கள்" மற்றும் "மூன்றாம்நிலைக் கல்வி நிறுவனங்கள்" மற்றும் "திறந்த பிரிவு") அத்துடன் "வெகுசன ஊடகப் பிரிவு" (“தனியாட்கள் பிரிவு” மற்றும் “செய்தித்தாள்கள், மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள்” என இரு பிரிவுகளாகும்) என்பவை “நிறுவன, வெகுசன ஊடக மற்றும் சமூகப் பிரிவு” என்பதன்கீழ் உள்ள ஆறு உப பிரிவுகளாகும்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வெப்தளமான www.cea.lk வெப் தளத்தில் பிரவேசிப்பதன் மூலமாக 0112873447, 0112872278 அல்லது 0112888999 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாக விண்ணப்பப் பத்திரங்களையும் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 0725064285 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாக உதவிப் பணிப்பாளர் கலாநிதி செல்வி லக்மிணீ ராதிகாவுடன் தொடர்புகொள்வதன் மூலமாகவும் 0713486339 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாக சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி அர்ஷா குமாரியுடன் தொடர்புகொள்வதன் மூலமாகவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருதுவழங்கல் விழாவின் மதிப்பீட்டு அலுவல்கள் அந்தந்த பிரிவுடன் தொடர்புடைய சிறப்பறிஞர்களால் மேற்கொள்ளப்படுவதோடு சிறப்பறிஞர் குழுவின் தீர்மானமே இறுதியானதாகும். “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்”, "தங்க விருதுகள்", “வெள்ளி சுற்றாடல் விருதுகள்”, “வெண்கல சுற்றாடல் விருதுகள்” மற்றும் “திறமை விருதுகள்” என்ற வகையிலான விருதுகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பு “ஜனாதிபதி சுற்றாடல் விருதுவழங்கல்” போட்டியாளர்களுக்கு உரித்தாகின்றது. இலங்கைச் சுற்றாடலின் பாதுகாப்பானதன்மையை பாதுகாத்திடும் நோக்கத்துடன் நடாத்தப்படுகின்ற இந்த விருதுவழங்கல் வைபவம் கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 2025 ஒக்டோபர் மாதத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “அழகான நாடு – மகிழ்ச்சியான மக்கள்” எனும் நோக்கத்தை முதன்மையாகக்கொண்டு அமுலாக்கப்பட்டு வருகின்ற “கிளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்துடன் கைகோர்த்து இம்முறை ஜனாதிபதி சுற்றாடல் விருதுவழங்கல் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்படுகின்றது.