யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீன அரசாங்கத்தின் 'சீனாவின் சகோதர பாசம்' செயற்றிட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கௌரவ சூ யன்வெய் அவர்களும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை பொழிந்த கன மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட 1070 குடும்பங்களிற்கு தலா ரூபா 6500.00 பெறுமதியான ஏறத்தாள 6.90 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கிய சீனா அரசாங்கத்திற்கும், இந் நிகழ்விற்கு வருகைதந்த இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கௌரவ . சூ யன்வெய் அவர்களுக்கும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் சீனத் தூதரக அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.