நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு, பாரம்பரிய வேலிகள் மற்றும் அடைப்புகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை வழங்கும் நோக்கில், புதிய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து "காட்டு யானைகளின் வாழ்விட மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய வேலைத்திட்டத்தை" ஆரம்பித்துள்ளன.
இந்த தனித்துவமான திட்டத்தின் ஆரம்பக் கட்டம் கலா வௌ மற்றும் புத்தளம் தப்போவ குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்திய காப்பகங்களை மையமாகக் கொண்டு ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
• ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல் மற்றும் இயற்கை உணவு நிலங்களை உருவாக்குதல்: காப்பகங்கள் மற்றும் குளங்களைச் சுற்றி பரவியுள்ள ஆகாயத்தாமரை (ஜப்பான் ஜபர) மற்றும் சீமைக்கருவேலம் (களபு அந்தர) போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்களை முழுமையாக அகற்றி, காட்டு யானைகளுக்கு உகந்த இயற்கை புற்கள் மற்றும் தாவரங்களை வளர்த்தல்.
• அழிவடைந்த குளங்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைத்தல்: வனவிலங்கு வலயங்களுக்குள் அமைந்துள்ள பழமையான குளங்களை புனரமைப்பதன் மூலம், வறட்சி காலங்களிலும் விலங்குகளுக்கு தேவையான நீர் வசதிகளை காடுகளுக்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளுதல்.
உலகளாவிய போக்குகளும் இலங்கையின் பங்கும்
தற்போது உலகம் முழுவதும் வனவிலங்கு மேலாண்மை என்பது "வாழ்விட வளம்செறிக்கல்" (Habitat Enrichment) மற்றும் "சகவாழ்வு" (Coexistence) ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது.
ஆப்பிரிக்க பிராந்தியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில், யானைகளுக்கான இயற்கை நடமாட்டப் பாதைகளைப் (Elephant Corridors) பாதுகாப்பதன் மூலமும், காடுகளுக்குள்ளேயே உணவு மற்றும் நீரைத் தாராளமாக கிடைக்கச் செய்வதன் மூலமும் வெற்றிகரமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இலங்கையின் புதிய அரசாங்கம் செயல்படுத்தும் இந்த "வாழ்விட மேம்பாட்டு" செயல்முறையும் அந்த சர்வதேச தரத்திற்கு இணங்க அமைந்துள்ளது. காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு முதன்மைக் காரணம் காடுகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையாகும். விலங்குகளின் பசியையும் தாகத்தையும் காடுகளுக்குள்ளேயே தீர்ப்பதன் மூலம், யானைகளை இயற்கையாகவே மனித குடியிருப்புகளிலிருந்து தூரத்தே வைத்திருக்க முடியும் என்பது உலகளாவிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


