மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவுக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கூடியதுடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்தக்கூடிய மாற்று தேர்தல் முறைகள் குறித்து இங்கு விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பழைய விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் பட்சத்தில், வேட்பாளர் பட்டியல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குதல், தொகுதி எல்லை நிர்ணயத்துடன் தொடர்புடைய சட்டரீதியான தடைகளை நீக்கி கலப்பு தேர்தல் முறைக்கு மாறுதல், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
மேலும், வேட்பாளர் பட்டியல் மட்டத்தில் மட்டுமன்றி, சபையின் மொத்த அமைப்பிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் சட்டரீதியாக உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் கவனம் செலுத்தியது. அதன்படி, சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதற்கான நடைமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
விருப்பு வாக்கு முறையின் கீழ் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள், தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் சர்வதேச அனுபவங்களும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. அதேவேளை, தேர்தல் முறையின் ஊடாக இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கருத்துக்கள், விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையையும் பரிந்துரைகளையும் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.


