தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 10 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு..
அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வேகமாகப் பரவி வரும் நீண்டகால சிறுநீரக நோய்க்கு (Chronic Kidney Disease) தீர்வாக, பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீரை வழங்குவதன் மூலம் அப்பிரதேசங்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மேற்கூறிய 03 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களின் தூய்மையான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 வீடுகளுக்குப் புதிய நீர் இணைப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து (CDB) பெறப்பட்ட சலுகைக் கடன் பயன்படுத்தப்பட்டதுடன், இது தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசேட திட்டமாக இனங்காணப்பட்டுள்ளது.
2022 மே மாதம் முதல் 2024 ஜனவரி வரையான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்புச் செயல்முறை காரணமாக இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும், புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் இலங்கை அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி இத்திட்டத்தின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது


