புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்
  • :
புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத்

 தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் நேற்றைய தினம் (07) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.

 கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த நல்லெண்ண சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை வகிக்கும் பங்கு, அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

 
புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கையின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், மக்களின் நலனுக்காகவும் இலங்கை கடற்படை ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பாராட்டினார். வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கான வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், சபாநாயகரின் வாழ்த்துகளுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் பொறுப்பை கடற்படை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார்.
 
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, ஏனைய நாடுகளுடனும் நடுநிலையான இராஜதந்திர உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை கடற்படை வணிக நோக்கில் படகுகள் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்கு வருவாய் ஈட்டுவதற்கும் உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் காணப்படும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் தீவுப் பகுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட இலங்கை கடற்படை தயாராக இருப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

Related Articles