சுயாதீன மின்னுற்பத்தியாளர்களுக்கு சூரிய மின்சக்தியைப் பயனுறு வகையில் பயன்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக முறைசார்ந்த தீர்வுகளை வழங்கி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கருத்திட்டமாக 'கூரை மீது சூரிய மின்சக்தியை இணைத்தல் மற்றும் நிகர அளவீடு தொடர்பான கருத்திட்டம்' அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்திற்கான நிதியிடலுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய ஏற்புடைய முகவரகங்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு 2025.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒருங்கிணைந்த கடன் பொறிமுறைக்கான ஜப்பான் நிதியத்துடன் உரிய கடன்கள் மற்றும் நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் தற்போது பூர்த்தியடைந்துள்ளது.
இக்கலந்துரையாடல்களில் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகளின் அடிப்படையிலும் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை பொது மூலதன வளங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் 15.4 மில்லியன் யூரோக்கள் நன்கொடையும், மற்றும் ஒருங்கிணைந்த கடன் பொறிமுறைக்கான ஜப்பான் நிதியத்தின் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாகவும் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் மற்றும் கொடை ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


