மாத்தறை மாவட்டத்தில் QR குறியீடு மூலம் தேயிலை உர மானியம் வழங்கும் முதல் திட்டம் அண்மையில் பிடபெத்தர நகரில் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது.
QR முறையின் கீழ் தேயிலை உரத்தைப் பெற, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகள் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய அலுவலகங்களில் அல்லது தேயிலை ஆலோசகர்/விரிவாக்க அதிகாரியை சந்திப்பதன் மூலம் அல்லது தேயிலை சங்கங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் புதிய முறை ஊடாக, பெற வேண்டிய உரம் மற்றும் மானியத்தின் அளவு எந்த தாமதமும் இல்லாமல் முறையாக கிடைப்பதை உறுதி செய்கிறது. QR குறியீடு மூலம் உங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட உர நிறுவனத்திடமிருந்து தேவையான தரமான உரத்தை எளிதாகப் பெற முடியும், ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை, அனைத்து விடயங்களும் உடனடியாகவும் தொழில்நுட்பத்தின் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றமையால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
தேயிலை உர மானியத்திற்காக அரசாங்கம் இதுவரை ரூ. 2,400 மில்லியன் (ரூ. 2.4 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு 50 கிலோ உர மூட்டைக்கு ரூபாய். 4,000 மானியம் வழங்க தீர்மானித்துள்ளது.


