மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதி
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (COPA) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி நேற்றைய தினம் (09) வழங்கப்பட்டது.
இந்த அறிக்கை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இது 2025 ஜூலை 25 ஆம் திகதி வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 இன் கீழ் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, தொடர்புடைய அறிக்கை நிதி அமைச்சரினதும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் அவதானிப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவ்வமைச்சர்களின் பதில்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், 2026 மார்ச் 04 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இவ்விடயங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.
அதன்போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, 2025 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 ஐக் கொண்ட அறிக்கை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்” எனும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையொன்று, இதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குமாக இவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இத்தகையதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


