இலங்கையின் தற்போதைய நிதி மற்றும் நாணயமாற்று விகித கொள்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினர்.
நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்றது.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


