மூன்று அரச ஊடக நிறுவனங்களையும் தனித்தனியாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை இணைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனங்களை நவீனமயமாக்கவும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றவும், பொது சேவையாக்குவதற்காக நிர்வாகத்துடன் இணைந்து தேவையான தலையீடுகளை அரசாங்கம் வழங்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் போது, இந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையாக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், சில அமைச்சரவை முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டதால் இந்த நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.