நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) காலை முதல் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட போதைப்பொருள் நடவடிக்கையை அனைத்து மட்டங்களிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாதலை தடுப்பது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலால் சமூகத்தில் ஏற்படும் பேரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சமூக கலாச்சார, சமூக தார்மீக, பொருளாதார மற்றும் சுகாதார சீரழிவைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி சட்டவிரோதமாக வெளியேறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பை உடைப்பது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து சகல பொலிஸ் அதிகாரிகளையும் தெளிவூட்ட, பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.