'Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளம் ஆரம்பம்
நமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்றிணைத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தவே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது
நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் - ஜனாதிபதி
அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொண்ட காலத்திற்குப் பதிலாக, பேரழிவுகளுக்கு முன்னால் மீண்டெழுந்து, முன்பை விட சிறந்த நாட்டை மக்களுக்கு விட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் மாற்றத்துடன் நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றியமைக்கவோ பின்வாங்கவோ இந்த அனர்த்தம் காரணமாக அமையாது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து திறன்களையும் இணைத்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை திறம்பட முன்னெடுக்க அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் லோட்டஸ் அரங்கில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய
வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
'Rebuilding Sri Lanka’ இற்காக வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் ஏனைய நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளமும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வலுவான, நியாயமான மற்றும் நிலைபேறான முறையில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கை, என்ற நோக்குடன் அனைவரையும் ஒன்றுசேர்த்து வெளிப்படையானதும் நிலைபேறானதுமான செயற்பாடுகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மக்கள், வளங்கள் மற்றும் ஆலோசனைகளை ஒன்றிணைக்கும் தளமாக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் ஊடாக நன்கொடைகளையும் வழங்க முடியும். மேலும், அந்த நன்கொடைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பார்வையிடலாம். இது நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
நிதி உதவி, பொருள் உதவி, காணி போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இதில் வழங்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் தன்மை தொடர்பான உறுதியான மற்றும் உண்மைத் தகவல்களை மாவட்ட ரீதியாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிகளை நன்கொடையாக வழங்கிய பலரின் காணிகள் பற்றிய தகவல்களும் இன்று இணையத்தில் சேர்க்கப்பட்டன.
இயற்கை அனர்த்தங்களுக்கு உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லை என்றாலும், நமது நாட்டில் நிலவும் சமத்துவமின்மை காரணமாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களே 80% க்கும் அதிகமாக இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டார்கள் என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தும் நோக்கத்திலேயே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்க தீர்மாணிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், உலகில் பல நாடுகள் வெறுமனே கால ஓட்டத்தில் கட்டியெழுப்பப்படவில்லை என்றும், மாறாக அதிர்ச்சிகளை எதிர்கொண்டும், அவற்றைத் தாங்கிக்கொண்டும், அவை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த மீள்கட்டமைப்புக்காகப் பெறப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்பேற்று, நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை பேணப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தில் தான் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளை, அரச பொறிமுறை, நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்கள் மீதும் தனக்கு
வலுவான நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்


