தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை முதன்முறையாக தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியொன்றை (படைப்பாக்கல்திறன் தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி) ஏற்பாடு செய்துள்ளது என்று தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபையின் இபணிப்பாளர் திருமதி செனாலி பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிங்களம் மற்றும் தமிழ் எழுத்தாளர்களால் ஆண்டுதோறும் பல்வேறுபட்ட புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, ஆனால் அந்த புத்தகங்களின் தரம் குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆண்டுதோறும் பதிப்பகத் துறையில் சேர்க்கப்படும் இந்தப் வெளியீடுகளின் தரம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை உயர் மட்டத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், இந்த நாட்டில் ஒரு நல்ல தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் பாடநெறியை தமிழ் மொழியிலும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
இத்திட்டத்தின் ஊடாக எழுத்தாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், குறைந்த வசதிகள் உள்ள நூலகங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலந்து கொண்ட நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் மிஹிர அரவிந்த கருத்துத் தெரிவிக்கையில்..
நாட்டில் தமிழ் மொழியில் படைப்பாக்கங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தமிழ் மொழியில் அறிவொளி பெற்ற எழுத்தாளர்களைத் தவிர, புதிய எழுத்தாளர்கள் பெரும் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தற்போதுள்ள பெரும்பாலான தமிழ் மொழி புத்தகங்கள் இந்திய புத்தகங்கள் என்றும் அவர் கூறினார். அதன்படி, நிபுணர்கள் குழுவொன்றை ஈடுபடுத்துவதன் மூலம் நாட்டில் தமிழ் மொழி இலக்கியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, மேலும் இந்தப் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பாடநெறியின் புதிய வகுப்புக்கள் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த கற்கைநெறி காலம் 1 வருடம் என்பதுடன், இதற்கான கட்டணம் ரூ. 40,000 ஆகும். இந்தப் பாடநெறி தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபையால் நிகழ்நிலையூடாகவும், நேரடியாகவும் நடாத்தப்படும், மேலதிக விவரங்களை தேசிய நூலகத்தின் வலைத்தளமான www.natlib.lk மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


