சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தேசிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தேசிய ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், முப்படையினர் அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், சுற்றுச்சூழல் குழுக்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பல கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நடவடிக்கை, நாட்டின் அடையாளம் காணப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கடற்கரைகளை sஊக்கப்படுத்தி பராமரிக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டது. மேலும், தூய்மையான சூழலை மேம்படுத்துதல், கடல் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுலா தகலங்களை மேம்படுத்தல் போன்றை நோக்கங்களை கொண்டுள்ளது.
‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் முப்படையினர், அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் செயற்பாட்டு பங்களிப்புடன் விரிவான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
வட மாகாணத்தில், பாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள 30 கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. அதேவேளை, இலங்கை கடற்படையும் கடற்கரைகளை sஊக்கப்படுத்தி பாதுகாக்கும் பணிகளில் இணைந்து செயல்பட்டது. கிழக்கு மாகாணத்தில், பாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு) கீழ் இயங்கும் 22, 23 மற்றும் 24 காலாட்படைப் பிரிவுகளின் படையினர் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 541, 542 மற்றும் 543 காலாட்படைப் பிரிகேட்கள் கடற்படை, பொலிஸ் மற்றும் சமூகப் பங்குதாரர்களுடன் இணைந்து 48 கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தின.
தென் மாகாணத்தில், குடாவெல்ல முதல் கிரிந்தை வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள 34 கடற்கரைகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, 59 ஆவது காலாட்படைப் பிரிவு முல்லைத்தீவு – கொக்கிளாய் கடற்கரைப் பகுதியில் சுமார் 36.5 கிலோமீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை சுத்தப்படுத்தியது.
இந்நாடளாவிய நடவடிக்கை, இலங்கையின் கடற்கரைச் சூழலைப் பாதுகாப்பதிலும், கடல் உயிரியல் அமைப்புகளைப் பேணுவதிலும், நாட்டிற்கான தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
இந்த நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுத்தப்படுத்தும் பணிகளில் செயற்பாட்டுடன் பங்கேற்றது. கடற்படைப் பணியாளர்கள் கடற்கரைப் பகுதிகளில் தேங்கியிருந்த பெருமளவிலான பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடி மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை அகற்றி, பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடல் சூழலியலைப் பாதுகாப்பதற்கும் கடற்கரைகளின் தூய்மையையும் அழகிய தோற்றத்தையும் பேணுவதற்கும் பங்களித்தனர். சேகரிக்கப்பட்ட கழிவுகள் நடைமுறையிலுள்ள கழிவு முகாமைத்துவ நடைமுறைகளுக்கு அமைவாக அகற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படைத் தளபதிகள் மற்றும் பிராந்திய கட்டளை தளபதிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.


