பிரதான முக்கிய விடயங்கள் சில தொடர்பாக கவனம் செலுத்துவதுடன், பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மாலபே வைத்தியர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை நாட்டிற்கு மிகவும் விளைதிறனுடைய வைத்தியசாலையாக விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
அண்மையில் இவ்வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டதுடன், அங்கு கலந்துரையாடலில் பங்குபற்றிய போதே அமைச்சர், மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், அரசாங்க வைத்தியசாலையொன்றிற்கு மேற்கொண்ட முதலாவது கண்காணிப்பு விஜயம் இதுவாகும்.
இதன் போது அமைச்சர் வைத்தியசாலையின் சகல பிரிவுகளுக்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதுடன், சம்பந்தப்பட்ட எதிர்கால திட்டங்களை தயாரிப்பதற்காக அமைச்சின் அதிகாரிகள், விசேட வைத்தியர்கள், உட்பட வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவினருடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தற்போதைய சுகாதார சேவைப் பணிப்பாளரின் தலைமையில் வைத்தியசாலை எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் அதற்கான சிபாரிசுகளை முன் வைப்பதற்காக அமைச்சர் நியமித்துள்ள விசேட குழு இவ்வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான திட்ட யோசனைகளைத் தயாரித்து வருவதாகவும் இதன் போது தெரியவந்தது.