NIRDC இன் கீழ் முதல் காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 09 திட்டங்களுக்காக புத்தாக்கத்தினருக்கு 227 மில்லியன் ரூபா நிதி வசதிகள் வழங்கி வைப்பு

NIRDC இன் கீழ் முதல் காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 09 திட்டங்களுக்காக புத்தாக்கத்தினருக்கு 227 மில்லியன் ரூபா நிதி வசதிகள் வழங்கி வைப்பு
  • :

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) இன் கீழ் இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 09 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் தொடர்பான சான்றிதழ்களைக் கையளித்தல் மற்றும் அது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலலகத்தில் நடைபெற்றது.

 

அதன்படி, 227 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான சான்றிதழ்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வழங்கப்பட்டன. இலங்கை வங்கி ஊடாக இந்த நிதி வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான வை.ஏ. ஜயதிலக ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப்பட்டது.

 

ஒப்பந்தத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், விண்ணப்பதாரர்களின் திட்டங்களுடன் தொடர்புடைய செயல்திறன் குறிகாட்டிகளுக்கு (KPI) ஏற்ப முன்னேற்றத்தை பரீட்சித்து, பகுதிகளாக வழங்கப்படவுள்ளது. அதன்படி,

 

1- தொலைத்தொடர்பு சார்ந்த வலையமைப்பு ரீதியான சிறுவர் நேய இணையக் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் நலனின் முன்னணி கண்டுபிடிப்பான Vx Safenet இற்கான சான்றிதழ் Visuamatix (Pvt) Ltd. நிறுவனத்தின் தீக்ஷண குமாரவுக்கும்,

 

2- Fractal Graphene and Activated கார்பன் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Volfpack Energy சிறந்த கொள்ளளவு திட்டத்திற்கான சான்றிதழ் Volfpack Energy (Pvt) Ltd இன் சஞ்சீவ கருணாரத்னவிற்கும்,

 

3- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், சீனி அல்லது மது பயன்படுத்தாமல் கறுவாவில் உள்ள அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் பாதுகாத்து Cold Brewed கறுவா சாற்றைப் பிரித்தெடுக்கும் திட்டத்திற்கான சான்றிதழ் Pure Cinnamon Exports (Pvt) Ltd இன் முதித ஜயதிலகவிடமும்,

 

4- ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சுத்தத்தை ஆய்வுகூடம் இன்றி விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கக்கூடிய தனித்துவமான நவீன தொழிநுட்பத்துடன் கூடிய உபகரணத்தை அறிமுகப்படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆலோகா மையத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கான சான்றிதழ் பேராசிரியர் ஜீ.கே.டீ.எஸ். ஜயநெத்திக்கும்,

 

5- தேயிலை உற்பத்தியின் சிறப்பு மற்றும் நவீனமயப்படுத்தலை உலகிற்கு எடுத்துக் காட்டும் தேசிய அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கும் Samanala Farm திட்டத்திற்கான சான்றிதழ் Samanala Farm நிறுவனத்தின் திருமதி பபசரா மனதுங்கவுக்கும்,

 

6- சிங்கள எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதில் உள்ள சிரமத்தை நீக்கி, அரச சேவைகளை செயற்திறனாக்கவும், குறிப்பாக பார்வைக் குறைபாடுள்ள சமூகத்தை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்கவும் உருவாக்கப்பட்ட இயற்கை குரலுடன் கூடிய AI System (Chatbot) for Sinhala கட்டமைப்புக்கான சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி ரணதில் புஷ்பானந்தவுக்கும்,

 

7- கிதுல் தொழிலுக்கு புத்துயிர் அளித்து, சீனியுடனான பானங்களுக்குப் பதிலாக இயற்கை நலன்மிக்க கிதுல் கோலா மற்றும் கொழுப்பு அற்ற பால் உற்பத்தி செய்யும் தனித்துவமான திட்டத்திற்குான சான்றிதழ் Planet’s Pick Holdings (Pvt) Ltd சார்பாக கபில விஜேசேகரவுக்கும்,

 

 

8- Flat knit தொழில்நுட்பம் மூலம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு, கலகெதர, மாத்தளை மற்றும் தம்புள்ளை போன்ற பகுதிகளில் பெண்களை வலுவூட்டுவதன் மூலம் உயர்ந்த சமூக தாக்கத்தை உருவாக்கும் TDR Knitting திட்டத்திற்கான சான்றிதழ் TDR Knitting (Pvt) Ltd இன் திருமதி லக்மாலி வனசிங்கவுக்கும்,

 

9- இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்து, மண்ணில் வாழும் இயற்கை நுண்ணுயிர்களை செயலூட்டுவதன் அதிக விளைச்சலை வழங்கும், “Magic-grow” மண் செயலூக்கத் திட்டத்திற்கான சான்றிதழ் Wasala Agro நிறுவனத்தின் வாசல சிறிவர்தனவிற்கும் கையளிக்கப்பட்டன.

 

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஆராய்ச்சி முடிவுகளை வணிகமயமாக்குவது இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என்றும், எனவே இது அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறந்த வாய்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

 

 

இந்த உதவியைப் பெற தகுதியுள்ள அனைத்து திட்டப் பெறுநர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க ஒருவரின் ஆராய்ச்சிக் கருத்து, வணிகமயமாக்கலை நோக்கி நகர்வதற்குத் தேவையான பின்னணியை வழங்க எமது அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்கள் தற்போது தயாராக உள்ளன. அதேபோன்று, ஏனைய அமைச்சுகளின் கீழ் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளதுடன், குறிப்பாக பல்கலைக்கழகங்கள், சுகாதாரம், பெருந் தோட்டங்கள் மற்றும் விவசாயத் தொழில்துறை ஆகியவை அவற்றில் முக்கியமானவை. எமக்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி குறித்து சரியான கொள்கை இருக்கவில்லை.

 

எமது அரசாங்கத்தின் கீழ், அந்தக் கொள்கையை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம். எந்தவொரு அபிவிருத்தி அடைந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிறுவனக் கட்டமைப்பையும் நாம் தற்போது வலுப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை செயல்படுத்தும் வேலைத் திட்டம் குறித்து நாம் முறையான ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.

 

அதன்படி, களத்தில் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது மற்றும் வழிமுறைகள் குறித்து எமக்கு நல்ல புரிதல் உள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு நாடாக மிக முக்கியமான படியின் சாட்சியாளர்களாக மாறும் நேரத்தில் இன்று நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற கொள்கையை செயல்படுத்துவதில், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது வெறும் அரசியல் அலங்காரமாக மாறவில்லை.

 

கடந்த ஒன்றரை வருடங்களாக, 17 துறைகளாகப் பிரித்து தற்போது நமது நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இலங்கையர்களை ஒன்றிணைத்து, இந்த ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத் துறை குறித்த கருத்தாடலை ஆரம்பித்தோம். அதன் விளைவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை தொடங்கப்பட்டது.

 

ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தொற்றா நோய்கள் பிரச்சினை ஆகும். சுகாதார அமைச்சாக, இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ஆண்டுதோறும் பெரும் தொகையை செலவிடுகிறோம். எனவே, இந்த உயர் தொழில்நுட்ப சாதனங்களுக்கு எல்லையற்ற அளவில் செலவிடப்படும் பணத்தை எவ்வாறேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின், இந்த நோயாளிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் முறைகள் நமக்குத் தேவை. நாம் இன்னும் அதில் வெற்றிபெறவில்லை.

 

 

எனவே, அதற்காக செய்யப்படும் ஆராய்ச்சிக்கு நாம் மிக உயர்ந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும், இந்த மக்கள் தேவையை ஆராய்ச்சி மூலம் நடைமுறை சாத்தியமான நிலைக்கு எவ்வாறுகொண்டு வருவது என்ற பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேலும் இது சிதறடிக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்படாத ஒரு விடயமாக இருக்கக்கூடாது. அரசாங்கம் இந்தத் துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற கருத்தை யதார்த்தமாக்க முயற்சிக்கிறது.

 

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய உற்பத்தி பொருளாதாரம் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முக்கிய அபிவிருத்திக் கொள்கையாகும். அதற்கு பெறுமதி சேர் பொருட்கள் மற்றும் சேவைகள் அவசியம்.

 

இந்த பொருட்கள் மற்றும் சேவைகளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மூலமே பெற முடியும். எனவே, தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பே இந்த விடயத்தில் மிகவும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார். இந்தத் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட ஒரு தலைவராக, அவர் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளுக்குப் பெரும் பலத்தை அளித்தார். இன்று நாம் ஒரு தனித்துவமான தருணத்தில் இங்கே இருக்கிறோம். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், நாம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையை (NIRDC) தொடங்கினோம். நாட்டில் எவ்வளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது வணிகமயமாக்கலுக்கான ஆற்றலைக் கொண்டிருந்தாலும், அது முன்னோக்கிச் செல்வதில்லை.

 

 

NIRDC அத்தகைய ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி, அதை வணிகமயமாக்கலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. அதன்படி, முடிவடையும் தருவாயில் உள்ள மற்றும் வணிகமயமாக்கல் திறனைக் கொண்ட எஞ்சிள்ள ஆராய்ச்சிப் பகுதியை முடிக்க தேவையான நிதியை NIRDC வழங்குகிறது. இன்று அந்த வேலைத் திட்டத்தின் முதல் பகுதி ஆகும். மேலும், ஆராய்ச்சி நிறைவு பெற்றாலும் அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். அவ்வாறான ஆராய்ச்சிகளுக்கு முதலீட்டாளர்களை தொடர்பு படுத்த நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். அதேபோன்று ஆராய்ச்சியை நிறைவு செய்து, நிதி இருந்தாலும் ஏனைய சிக்கல்களுக்கு முகங்கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

 

நாம் அவ்வாறான சிக்கல்களை தீர்த்துவைக்கவும் பணியாற்றி வருகிறோம். இந்த 03 விடயங்களையும் NIRDC முன்னெடுப்பதுடன், இவ்வாறான ஒரு விடயம் இலங்கையில் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை. எமக்கு முதல் காலாண்டில் 2.2 பில்லியன் ரூபா பெறுமதியான ஆராய்ச்சி முன்மொழிவுகள் கிடைத்தன. அந்த முன்மொழிவுகளை தெரிவு செய்ய மிகவும் முன்னேற்றகரமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மீளாய்வு முறைமையை நாம் பின்பற்றினோம். அந்த செய்ல்முறையில் முக்கிய 05 பிரிவுகள் இருக்கின்றன. அதுதான் ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப மீளாய்வு. நிர்வாகம், நிதி மற்றும் வணிகமயமாக்கல் சாத்தியம். மிகவும் சுயாதீனமான மீளாய்வாளர்கள் மூலமே நாம் தொழிநுட்ப மீளாய்வை நடத்தினோம். எமக்கு பல்வேறு துறைகளில் தகுதியுள்ள சுமார் 200 மீளாய்வாளர்கள் தற்போது உள்ளனர். நெருக்கமானர்களை தெரிவுசெய்தல் என்ற செயல்முறைக்கான வாய்ப்பை அகற்றி இந்த மீளாய்வை நடத்தியது இதன் சிறப்பம்சமாகும்.

 

தொழிநுட்ப மீளாய்வுகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முன்மொழிவுகள் நிரவாகம் மற்றும் நிதி மீளாய்வுக்கு அனுப்பப்படும். அதிலும் தெரிவு செய்யப்பட்ட 09 முன்மொழிவுகள்தான் இன்று இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) பணிப்பாளர் நாயகம் முதித.டீ செனரத் யாபா இங்கு நன்றி உரை நிகழ்த்தினார். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டிஜிடல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதானிகள்,வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதானிகள்,நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்தகொண்டனர்.

 

 

ජනාධිපති මාධ්‍ය අංශය

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

President’s Media Division (PMD)

2025-12-22

Related Articles