பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி
  • :
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

 
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.
 
அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
 
மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles