இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராக அவர் விளங்குவதால், பெண்களுக்கெதிரான பொறாமை, வெறுப்பு மற்றும் குரோதத்தினால் தூண்டப்பட்டு இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கலாநிதி அமரசூரியவுக்கு எதிரான இந்த மோசமான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், எமது சமூகத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் பின்தங்கிய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகம் ஒன்றில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பாரிய பிழை ஒன்று ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இத்தகைய விமர்சனங்களும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய துரதிர்ஸ்டவசமான தவறுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது முன்வைக்கப்படும் நியாயமான மற்றும் உண்மையான விமர்சனங்கள் குறித்து எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரதமர் அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரமானது. ஒரு ஜனநாயக சமூகத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான தார்மீக எல்லைகளை மீறுவதாகவே நாம் கருதுகிறோம். இவை சில நேரங்களில் அவரது ஆளுமையையும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பதவியை வகிக்கும் ஒரு பெண்ணின் கௌரவம் மற்றும் சுயமரியாதையையும் பாதிப்பதாக அமைகின்றன. நாட்டின் பெண் பிரதமர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இத்தகைய பால்நிலை ரீதியான அவமதிப்புகள் மற்றும் இழிவுபடுத்தல்கள் குறித்து இலங்கைப் பிரஜைகள் அதிருப்தி தெரிவிக்க வேண்டும்.
கலாநிதி அமரசூரியவுக்கு எதிரான இந்த வெறுப்புப் பிரச்சாரமானது சில குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களால் தூண்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம். சில மதகுருமார்களும் கூட இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து பல பிரஜைகள் தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.
கலாநிதி அமரசூரிய ஒரு பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினால் பகிரங்கமாக இழிவுபடுத்தப்படுவதை நாம் ஆழ்ந்த வருத்தத்துடன் நோக்குகிறோம். இது 1960-களின் முற்பகுதியில் இருந்து இலங்கையின் பல பெண் அரசியல் தலைவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்த அதே வெறுப்புணர்வினது தொடர்ச்சியாகும். இலங்கையினதும் உலகினதும் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி கூட இத்தகைய வெறுப்பு மற்றும் துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பவில்லை. கலாநிதி அமரசூரிய தற்போது தாக்கப்படும் கொடூரமான விதம், நமது சமூகத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் இருண்ட சக்திகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. இது நமது பிரஜைகள் போற்றும் ஜனநாயக மற்றும் மனிதாபிமான விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாகும்.
ஒரு ஜனநாயக சமூகத்தில், பொதுக் கொள்கைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் நடைமுறைகளில் ஏற்படும் தவறுகள், குறைபாடுகள் குறித்து கவலை தெரிவிக்கவும், பகிரங்கமாக விமர்சிக்கவும் பிரஜைகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொறுப்புக்கூறச் செய்வதும் அவர்களின் ஜனநாயகக் கடமையாகும். பல பிரஜைகள் இத்தகைய ஆக்கபூர்வமான விமர்சனங்களில் ஈடுபடுவதையும், பிரதமர் அமரசூரியவை இலக்கு வைக்கும் தீங்கு விளைவிக்கும் ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து கவலை தெரிவிப்பதையும் நாம் மகிழ்ச்சியுடன் கவனத்தில் கொள்கிறோம்.நிர்வாகக் குறைபாடுகளைச் சரிசெய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், இந்த அவதூறுப் பிரச்சாரங்களை அலட்சியப்படுத்துவதற்கும் தேவையான முதிர்ச்சியும் தைரியமும் அவரிடம் இருப்பதாக நாம் நம்புகிறோம்.
ஒரு பாரிய தவறு இழைக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதையும், அது குறித்து பொலிஸ் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளதையும் நாம் வரவேற்கிறோம். இது ஒரு சாதகமான நடவடிக்கையாகும். எவ்வாறாயினும், பிரதமருக்கும் அவரது பால்நிலைக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் அவதூறான தாக்குதல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் அமரசூரியவின் சாதனை முன்மாதிரியானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணியம், தைரியம், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஆக்கபூர்வமான, நன்கு சிந்திக்கப்பட்ட மற்றும் புலமைவாய்ந்த உரைகள் மூலம் விவாதங்களில் பங்களிப்பு செய்தல் ஆகியவை அவரது பாராளுமன்ற நடத்தையின் சிறப்பம்சங்களாகும்.
கலாநிதி அமரசூரியவுக்கு எதிரான இந்த மனசாட்சியற்ற homophobic தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள், இத்தகைய பிரச்சாரங்கள் நாட்டின் அனைத்து ஜனநாயகப் பிரஜைகளும் போற்றும் மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது என்பதால், அதனைத் தொடர வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.
கையெழுத்திட்டவர்கள்:
பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட, பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கலாநிதி காமினி விஜேசூரிய, கலாநிதி ராதிகா குமாரசுவாமி, எம். ஏ. சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி, பேராசிரியர் உத்பலா ஏ. ஜயவர்தன, பேராசிரியர் அன்பழகன் அரியதுரை, பேராசிரியர் நீரா விக்ரமசிங்க, பேராசிரியர் பர்சானா ஹனீபா, பேராசிரியர் பிரின்ஸ் ஜெயதேவன், பேராசிரியர் விவேமாரி வண்டர்போர்டன். பேராசிரியர் ரோஹன் பெர்னாண்டோ, பேராசிரியர் வசந்த செனவிரத்ன, பேராசிரியர் காஞ்சனா என். ருவன்புர, திரு. சரித் குணவர்தன, திரு. விதுர முனசிங்க, திரு. சந்துன் துடுகல, திருமதி பிரியந்தி பெர்னாண்டோ, திருமதி பவானி பொன்சேகா, திருமதி ஜனஹா செல்வராஜ், கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், கலாநிதி அமாலி வெலகெதர, கலாநிதி தியாகராஜா வரதாஸ், கலாநிதி அதுலசிறி சமரகோன், கலாநிதி எஸ். ஜீவசுதன், கலாநிதி கௌசல்யா குமாரசிங்க, கலாநிதி திலீப வித்தாரண. கலாநிதி சிதுமினி ரத்னமாலல, கலாநிதி எஸ். அறிவழகன், கலாநிதி மரியதாஸ் ஆல்ஃபிரட், கலாநிதி என். வரதன், கலாநிதி கௌசல்யா பெரேரா, கலாநிதி கிறிஸ்டல் பெயின்ஸ், திருமதி எர்மிசா டெகல், திரு. வங்கீச சுமனசேகர, திருமதி ஸ்ரீன் அப்துல் சரூர், திருமதி சரளா இம்மானுவேல், திருமதி ஹிரண்யதா தேவசிறி, திரு. விமல் சாமிநாதன், பொறியியலாளர் எம். சூரியசேகரம், திருமதி ஷிரானி மில்ஸ், கலாநிதி சூலானி கொடிக்கார, திரு. ரொபர்ட் க்ரூஸ், திரு. ருக்கி பெர்னாண்டோ, கலாநிதி பிரதீப் பீரிஸ், பேராசிரியர் நெலோபர் டி மெல், பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி, கலாநிதி ரமேஸ் ராமசாமி, கலாநிதி சுசந்த பஸ்நாயக்க, கலாநிதி ஷாமலா குமார், பேராசிரியர் பவித்ரா கைலாசபதி, கலாநிதி மதுபாஷினி ரத்நாயக்க, கலாநிதி முகமது பாசில்.


