நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் போரில் காயமடைந்து அங்கவீனமுற்ற போர்வீரர்கள் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் நேற்று (26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவரின் ஆலோசனையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட இச்சபையின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு நியமிக்கப்பட்டார். அத்துடன் முப்படைகளின் நலன்புரி இயக்குனர்களும் இதில் அடங்குவார்கள்.
இன்றைய கலந்துரையாடலில், போர் வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகளை சரியான முறையில் கண்டறிதல் மற்றும் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.