ஐக்கிய இராச்சிய சந்தைக்கான சிறு, நடுத்தர அளவிலான ஏற்றுமதி வணிகங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக, சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் மூலமான ஏற்றுமதி கையேடுகள் அறிமுகம்..

ஐக்கிய இராச்சிய சந்தைக்கான சிறு, நடுத்தர அளவிலான ஏற்றுமதி வணிகங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக, சிங்கள  மற்றும் தமிழ் மொழிகள் மூலமான ஏற்றுமதி கையேடுகள் அறிமுகம்..
  • :

ஐக்கிய இராச்சிய சந்தைக்கான சிறு, நடுத்தர அளவிலான ஏற்றுமதி வணிகங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக, ‘SheTrades இலங்கை மையம்’ தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் மூலமான ஏற்றுமதி கையேடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘SheTrades இலங்கை மையம்' (SheTrades Sri Lanka Hub)’ அமைப்பை நடத்தும் முதன்மை நிறுவனமான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB), சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய இராச்சிய தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து, துணி மற்றும் ஆடைத் துறை (பெண்களுக்கான அணிகலன்கள், காலணிகள் மற்றும் கைவினைப் பொருட்கள்) மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாய உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகிய துறைகளுக்கான இரண்டு ஏற்றுமதி கையேடுகளை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர அளவிலான வணிகங்கள் (SMEs) ஐக்கிய இராச்சிய தூதரக (UK) சந்தையைச் சிறந்த முறையில் அணுகுவதற்கும், அவர்களின் ஏற்றுமதித் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும் இக்கையேடுகள் இலக்கு வைத்துள்ளன.

இக்கையேடுகள், ஐக்கிய இராச்சிய தூதரக வளர்ந்து வரும் நாடுகள் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 92% உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு மற்றும் இதர வர்த்தகச் சலுகைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

இந்தத் திட்டம், ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இயங்கும் ‘SheTrades’ பொதுநலவாய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இது பொதுநலவாய நாடுகளிலுள்ள பெண் தொழில்முனைவோர் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் ஏற்றுமதி சார்ந்த வணிகங்களின் போட்டித்திறன், திறன் மற்றும் சர்வதேச சந்தை அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த அறிமுக விழாவில், இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தகத் தூதுவர் லார்ட் ஹேனெட் (Lord Hannett of Everton), இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர். பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக்குதல் மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவை குறித்து இவ்விழாவில் கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, இலங்கை பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம், சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பை வரவேற்றார். இலங்கைக்கான முக்கிய வர்த்தகப் பங்காளியாக ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், வளர்ந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் உள்ள வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். மேலும், சர்வதேச சந்தைகளில் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக, அவற்றின் போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் ஏற்றுமதித் தயார்நிலையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ள பெண் தொழில்முனைவோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், இந்த மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்கியதற்காக ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் 'SheTrades' திட்டத்திற்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய இராச்சியத்தின் வளர்ந்து வரும் நாடுகள் வர்த்தகத் திட்டம் (DCTS), முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகளின் கீழ் இலங்கை நிறுவனங்கள் ஐக்கிய இராச்சிய சந்தைக்குள் நுழைவதற்கும், தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்" என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டார்.

விழாவில் உரையாற்றிய லார்ட் ஹேனெட், சர்வதேச சந்தை வாய்ப்புகளிலிருந்து தொழில்முனைவோர் தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்வதில் வர்த்தக ஆதரவுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஏற்றுமதி கையேடுகளை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம், இலங்கை முழுவதிலும் உள்ள தொழில்முனைவோர் மதிப்புமிக்க சந்தைத் தகவல்களை எளிதாகப் பெற முடியும் என்றும், இதன் மூலம் ஏற்றுமதித் தேவைகள் மற்றும் பிரித்தானிய சந்தை வாய்ப்புகளை வணிகங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பூஜ்ஜிய-வரி (Zero-tariff) சலுகை மூலம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் ஐக்கிய இராச்சிய சந்தையில் தங்களது வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கையேடுகள், பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்கள் ஐக்கிய இராச்சிய ஏற்றுமதி சந்தையின் நடைமுறைகள், ஒழுங்குமுறை இணக்கங்கள் மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளைக் கையாள்வதற்கான நடைமுறை வழிகாட்டிகளாக அமைகின்றன. இத்தகவல்களை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் வழங்குவதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில்முனைவோர் மத்தியில் சிறந்த அணுகலையும் பரவலான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

இந்த கையேடுகளை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB SheTrades) வெளியீடுகள் மற்றும் வள ஆதார இணையதளம் வழியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்:

https://www.srilankabusiness.com/exporters/shetrades/publications-and-resources.html

இந்நிகழ்வானது ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சர்வதேச வர்த்தக மையம் கொழும்பிலுள்ள ஐக்கிய இராச்சிய தூதரகம் மற்றும் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்ச்சியான கூட்டுறவைப் பிரதிபலிப்பதுடன், இலங்கையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், சிறு மற்றும் நடுத்தர வணிக ஏற்றுமதிகளை வலுப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

SheTrades பொதுநலவாய திட்டம் பற்றி:

ஐக்கிய இராச்சிய சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (UK International Development) நிதி உதவியுடன் ஏப்ரல் 2018 இல் தொடங்கப்பட்ட ‘SheTrades’ பொதுநலவாய திட்டமானது, பாலின சமத்துவத்துடன் கூடிய வணிகச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொதுநலவாய நாடுகள் மற்றும் ஆசிய (ASEAN) பிராந்தியம் உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளை உள்ளடக்கிய கொள்கைகளை ஊக்குவித்தல், வணிக ஆதரவு அமைப்புகள், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் வணிகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த இலக்கைச் செயல்படுத்தி வருகிறது.

Related Articles