தரமான ஊடக அறிவாற்றல் கொண்ட திறன்மிக்க இலங்கைப் பாடசாலை சமூகத்தை உருவாக்கும் "மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026" - திருகோணமலை மாவட்டத்திலும்..
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், நாடளாவிய ரீதியில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்படும், தரமான ஊடக அறிவாற்றல் கொண்ட திறன்மிக்க இலங்கைப் பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட பாடசாலை ஊடகக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (22) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலக மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் விசேட காணொளிச் செய்தி ஒளிப்பரப்பப்பட்டது. அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார, மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சுதாகரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெ. ஸ்ரீபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் கற்கைகள் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சிவப்பிரியா ஸ்ரீராம், தகவல்களை விமர்சன ரீதியாக அணுகுதல், சமூக ஊடகப் பயன்பாட்டில் பொறுப்புணர்வு, போலியான மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காணுதல், டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பான செயற்பாடுகள் குறித்த விடயங்களைத் தெளிவு படுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தர் எஸ்.எம். ரஸீன், மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன் வளர்ச்சியில் ஊடகக் கழகங்களின் பங்கு மற்றும் ஊடகச் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் முறைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
இறுதி அமர்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆர். சுபீட்சன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், அதன் தற்போதைய உலகளாவிய பயன்பாடுகள் மற்றும் கல்வித் துறையில் அதனை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம்? என்பன குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
மாணவர்களிடையே ஊடக அறிவாற்றல், விமர்சன சிந்தனை, தகவல் பகுப்பாய்வு திறன், டிஜிட்டல் பொறுப்புணர்வு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்


