தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் விடைபெற்றுச் செல்வதற்காகப் பிரதமரைச் சந்தித்தார்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் விடைபெற்றுச் செல்வதற்காகப் பிரதமரைச் சந்தித்தார்
  • :
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் கோலம் சர்வர் Golam Sarwar, ஜூன் 22 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

 

இதன்போது, SAARC செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர் அவர்களை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் SAARC அமைப்பின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் செயலாளர் நாயகம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
 
2026 ஜூன் 23 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைச்சர்கள் மாநாடு' குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தெற்காசியா முழுவதிலும் வாழ்கின்ற குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பிராந்திய நடவடிக்கைகளின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
 
இச்சந்திப்பின்போது, SAARC செயலகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் SAARC கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய பிராந்திய முன்னெடுப்புகள் குறித்து செயலாளர் நாயகம் பிரதமருக்கு விளக்கமளித்தார். உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துவதற்கும் SAARC மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
 
சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் SAARC மற்றும் ஏனைய பிராந்திய அமைப்புகளுக்கிடையில் நெருக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
SAARC மீதான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், பிராந்திய அமைதி, சுபீட்சம் மற்றும் மக்கள் மையப்படுத்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைப்பின் முன்னெடுப்புகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் காத்மாண்டு SAARC செயலகத்தின் பணிப்பாளர் (ESC) வருண வில்பத்த, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles