- தியத்தலாவை இலங்கை இராணுவ கலாசாலையில் (SLMA) புதிதாக அதிகாரம் பெற்ற 222 அதிகாரிகள் தேசத்திற்காக அர்ப்பணிப்பு
"ஒரு நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் குடிமக்கள், அவர்களைப் பாதுகாப்பதே உங்களின் முதல் மற்றும் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பு உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அவர்களின் உயிரைப் பாதுகாப்பது உங்கள் தலையாய கடமையாகும்," என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
"எந்தவொரு சாதாரண கடமையையும் விட பெரிய பொறுப்பை நீங்கள் அனைவரும் சுமக்கிறீர்கள். உங்களின் முழுமையான அர்ப்பணிப்பு, தலைமைத்துவ திறன் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் தேசத்தின் முன்னேற்றத்திற்கு விலைமதிப்பற்றதாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
" இந்த அரசு கடந்த செப்டம்பர் பின்னர் நவம்பரில் இரண்டு பெரிய மக்கள் ஆணைகளைப் பெற்றது, அத்துடன் ஜனாதிபதியும் அரசாங்கமும் அனைத்து மட்டங்களிலும் சரியான அரசியல் தலைமைதுவத்தை வழங்குவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தியத்தலாவை இலங்கை இராணுவ கலாசாலையில் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்ற பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இராணுவ கெடெட் அதிகாரிகளின் அணிவகுப்பின் (POP) போது புதிதாக அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் 222 அதிகாரி கெடெட் அதிகாரிகள் இரண்டாவது லெப்டினன்ட்களாக இராணுவ அதிகாரம் பெற்றார்கள். புதிதாக அதிகாரம் பெற்ற அதிகாரிகளில், 203 ஆண் மற்றும், 19 பெண் கேடட் அதிகாரிகள் உள்ளடங்குவர். மேலும் இதில் கென்யா, உகாண்டா, காம்பியா மற்றும் செம்பியாவைச் சேர்ந்த 10 வெளிநாட்டு கெடெட் அதிகாரிகளும் உள்ளடங்குவர். அத்துடன், இந்திய தேசிய பாதுகாப்பு கலாசாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி கலாசாலை அத்துடன் பங்களாதேஷ் இராணுவ கலாசாலை மற்றும் பாகிஸ்தான் இராணுவ கலாசாலை போன்ற புகழ்பெற்ற இராணுவ பயிட்சி கலாசாலைகளில் வெளிநாட்டு பயிற்சியை முடித்த பதின்மூன்று இலங்கை கெடெட் அதிகாரிகளுக்கும் இந்நிகழ்வின் போது அதிகாரம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் SLMA கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சில்வெஸ்டர் பெரேரா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சரை அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர் பிரதம அதிதி, மரணம் அடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் முகமாக, SLMA போர்வீரர் நினைவு தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்,
புதிதாக அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர், “பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் சார்பாக, போரை வென்ற இராணுவத்தில் இணைவதற்கான உங்கள் முடிவை நான் பாராட்ட விரும்புகிறேன். இன்று நீங்கள் பெற்ற அதிகாரம் ஒரு விலைமதிப்பற்ற சாதனை என குறிப்பிட்டார். சமாதான காலத்திலும் கூட இந்த குறிப்பிடத்தக்க தீர்மானத்திற்கு ஆதரவளித்த அவர்களின் பெற்றோர்களுக்கும் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
“நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் நீங்கள் இராணுவத்தில் இணைந்துள்ளீர்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் அழிக்கப்பட்ட போதிலும், நாம் எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பை நிலைநிறுத்துவது அவசியம், என வலியுறுத்தினார்.
இராணுவப் பயிற்சியின் முக்கிய பங்கு மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மகத்தான பொறுப்பையும் பிரதி அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நெருக்கடியான நிலைமைகளிலிருந்து நாட்டை விடுவிப்பதில் ஆயுதப்படைகளின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதிகாரிகளின் தயார்நிலையை வலியுறுத்தி, ஐ.நா.வின் கீழ் வெளிநாட்டுப் பாதுகாப்பு பணிகளில் சேவையாற்றும் இலங்கை படையினர் பல ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்படுவதையும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
இராணுவ கலாசாலையில் அவர்கள் பெற்ற அறிவு, பயிற்சி மற்றும் தேர்ச்சிபெற்ற அணுகுமுறை ஆகியவற்றின் மீது நம்பிக்கை தெரிவித்த அவர், இது இளம் அதிகாரிகள் தங்கள் தாய்நாட்டிற்கான உன்னத கடமையை மரியாதையுடனும் தனித்துவத்துடனும் நிறைவேற்ற உதவும் என்றார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இலங்கை இராணுவ அகாடமியின் 'சீன-இலங்கை நட்புறவு' கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட கேடட் அதிகாரிகளின் Final Presentation நிகழ்ச்சியிலும் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டனர். "இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கு நாடுகடந்த குற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்: பாதுகாப்புப் படைகளின் பங்கு" என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு அமைச்சரின் பாராட்டிற்கு உட்பட்டது.
நாட்டின் மதிப்புமிக்க இராணுவக் கல்வி நிறுவனமான இலங்கை இராணுவ அகாடமி, சிறந்த இராணுவத் தலைவர்களை உருவாக்குவதற்கு அயராது பங்களித்து வருகின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள், தேசத்தைக் கட்டியெழுப்பும் சவால்களை எதிர்கொள்ளவும், வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளை எதிர்கொள்ளவும் தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராணுவ பிரதம அதிகாரி, வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள், புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள், மற்றும் சிறப்பு அதிதிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.