மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் கருத்தைத் தொடர்ந்து, கடந்த 12 ஆம் திகதி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, பிச்சை எடுப்பது, வணிகம் செய்வது, வீட்டு வேலை மற்றும் பிற ஆபத்தான வேலைகளில் குழந்தைகள் பணியமர்த்தப்படுவதற்கு எதிரான தற்போதைய சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்தவும், அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தவும் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது.
ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்தச் சட்டங்களை செயல்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டியதன் அவசியத்தை அறிவிக்கும் ஒரு அமைச்சரவைக் குறிப்பையும் வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்காக வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த நாட்களில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அனுராதபுரம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகளில், இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், இதுவரை 21 பாதுகாப்பற்ற சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு அதிகாரிகளின் மேற்பார்வையில், பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


