உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
  • :
உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினதும் வவுனியா பல்கலைக்கழகத்தினதும் இணை முயற்சியால், பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் 23.01.2026 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
 இது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வவுனியா மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற உள்ளூர் தயாரிப்புகளுக்கான தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் முக்கிய மையமாக செயல்படவுள்ளது.
 
நீண்ட காலமாக, வடக்கு பகுதியில் உள்ள சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை அரச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய தென் மாகாணங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அதிக செலவுகள், காலதாமதம் மற்றும் சந்தை அணுகலில் சிக்கல்கள் உருவானது.
 
இந்த சவால்களை கருத்தில் கொண்டு, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது, விவசாய மற்றும் உணவுத் தொழில் துறைகளை வலுப்படுத்துவது, மேலும் ஏற்றுமதி தரநிலைகளை அடைவதற்கான வசதிகளை வடக்கு மாகாணத்திலேயே உருவாக்குவது என்பதற்காக, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சும் வவுனியா பல்கலைக்கழகமும் இணைந்து இந்த தரப் பரிசோதனை நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுத்திருந்தன.
 
முன்னதாக, பல்வேறு ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலம், விவசாயிகள், உணவு உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் தேவைகள் அடையாளம் காணப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த நிலையத்தின் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையத்தின் முக்கிய நோக்கங்களாக..
 

உள்ளூர் உணவுப் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளின் தரத்தை சர்வதேச மற்றும் தேசிய தரநிலைகளுக்கு ஏற்ப உறுதி செய்தல்.

சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு தரச் சான்றிதழ் பெற உதவுதல்.

உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.

ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆய்வக வசதிகளை வழங்குதல்.
 
இதனூடாக வழங்கப்படும் முக்கிய சேவைகளாக...
 
உணவுப் பொருட்களுக்கான தர மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகள்.
விவசாய உற்பத்திகளுக்கான தர மதிப்பீடுகள்
நீர், மண் மற்றும் மூலப்பொருட்களின் ஆய்வுகள்.
உற்பத்தியாளர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள்.
 
இந்த தரப் பரிசோதனை நிலையம், வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related Articles